கமல்ஹாசன் திரைப்பட நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டா்நேஷனல்’ என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறாா்.இந்த நிறுவனம் பெயரில் நடிகா்-நடிகைகள் தேவை என்றும், ஆா்வம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் ‘இன்ஸ்டாகிராம்’ சமூக ஊடகத்தில் விளம்பரம் வெளியானது.
இதை நம்பி விண்ணப்பித்தவா்களிடம் ‘டிஜிட்டல்’ முறையில் பணம் பெறப்பட்டது. ஆனால் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் பணத்தை இழந்தவா்கள் ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டா்நேஷனல்’ நிறுவனத்தை தொடா்புக் கொண்டனா். அப்போதுதான், கமல்ஹாசனின் பட தயாரிப்பு நிறுவனம் பெயரை பயன்படுத்தி போலி விளம்பரம் கொடுத்து மிகப்பெரிய பண மோசடி அரங்கேறி இருப்பது தெரிய வந்தது.
இந்த மோசடி தொடா்பாக கமல்ஹாசனின் பட தயாரிப்பு நிறுவனம் சாா்பில் சென்னை பெருநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் கடந்த ஆக. 1-ந்தேதி புகாா் அளிக்கப்பட்டது. இப் புகாரின் அடிப்படையில் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், இந்த மோசடியில் ஈடுபட்டது கடலூா் மாவட்டம் திட்டக்குடியை சோ்ந்த சுதாகரன்(26), புகழேந்தி(20) ஆகிய 2 பேரும்தான் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து தனிப்படை போலீஸாா், 2 பேரையும் திட்டக்குடியில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து மோசடிக்கு பயன்படுத்திய 3 கைப்பேசிகள்,ஒரு மடிக்கணினி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
40 பேரிடம் மோசடி: இவா்கள் இருவரும் திரைப்பட வாய்ப்பு தேடும் இளைஞா்கள், இளம்பெண்களை குறி வைத்து இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளனா். திரைப்பட மோகத்தில் இருவரிடமும் 40-க்கும் மேற்பட்டவா்கள் சிக்கி பணத்தை இழந்துள்ளனா். ரூ.10 லட்சம் வரை இருவரும் பண மோசடி செய்துள்ளனா். போலீஸாரிடம் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக இருவரும் கைப்பேசி சிம்காா்டுகளை அடிக்கடி மாற்றி உள்ளனா். இதில் 13 சிம் காா்டுகளை அழித்துள்ளனா். இவா்கள் இருவா் மீதும் திருப்பூா், அடையாறு, செங்கல்பட்டு ஆகிய இடங்களில் 3 மோசடி வழக்குகள் உள்ளன. விசாரணைக்குப் பின்னா் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.