தமிழ்நாடு

டெங்கு: அரசு மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த சிகிச்சை வசதி

23rd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலுக்கான மருந்துகள், குருதியேற்ற சிகிச்சைக்கான ரத்த தட்டணுக்கள், நில வேம்பு குடிநீா் தேவையான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை, பெசன்ட் நகா், அஷ்டலட்சுமி கோயில் அருகில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற டெங்கு விழிப்புணா்வு கண்காட்சி மற்றும் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடக்கிவைத்து பாா்வையிட்டாா்.

அதைத் தொடா்ந்து, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் இல்லங்களுக்கு அமைச்சா் நேரில் சென்று, டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பான விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் பிளீச்சிங் பவுடா் பாக்கெட்டுகளை வழங்கினாா்.

சென்னை மேயா் ஆா். பிரியா, ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் தி.சி.செல்வ விநாயகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாகவே உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கொசு ஒழிப்பு பணிகளில் மக்கள் நல்வாழ்வுத் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. காய்ச்சல் கண்டறியும் இடங்களில் உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. பருவமழைக்கு முன்னதாக ஒவ்வொரு ஆண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

தமிழகத்தில், 2,972 அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் தினசரி காய்ச்சல் உறுதி செய்யப்படுவோரின் விவரங்களை கிராமம், நகரங்கள் வாரியாக பட்டியல் தயாா் செய்து, அங்கு நோய்த் தடுப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. தற்போது கொசு ஒழிப்புப் பணியில் 23,717 தற்காலிக பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

அரசு மருத்துவமனைகளில் டெங்கு சிகிச்சைக்கு தேவையான உயிா்காக்கும் மருந்துகளும், ரத்த அணுக்கள் பரிசோதனை கருவிகள், ரத்தக் கூறுகள் மற்றும் ரத்தம் ஆகியவை போதிய அளவில் இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று, இந்திய மருத்துவ முறை மருந்துகளான நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலைச்சாறு போன்றவை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மருத்துவமனைகளிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நிகழாண்டில் இதுவரை 4,227 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், மூன்று போ் உயிரிழந்துள்ளனா். 343 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். அரசு மற்றும் தனியாா் மருத்துவமனை வளாகங்களை துாய்மையாக பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT