சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அருகே ரூ.4.75 கோடியில் பல்வேறு திட்டப்பணிகளை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அருகே முத்துமலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் பகுதியில் உள்ள சாலையை மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடிக்கான நிதி ஒதுக்கீடு செய்து பேவர் பிளாக் கற்கள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதே போன்று ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெய்சங்கரன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஆத்தூர் நகராட்சி 23 ஆவது வார்டு அண்ணா தெருவில் பாலம் கட்ட ரூ.10 லட்சம் மற்றும் 11 ஆவது வார்டு நீர்த்தேக்க தொட்டி கட்ட ரூ.13.5 லட்சமும், ஆர்சி அரசு உதவி பெறும் பள்ளிக்கு ரூ.10 லட்சத்தில் கழிப்பறை வசதியும், ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.6 லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டது.
இதையும் படிக்க | போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் பலி?
அதேபோல ஆத்தூர் முல்லைவாடி காலனியில் ரூ.13 லட்சத்தில் ரேசன் கடை மற்றும் பயணிகள் நிழற்கூடம், பள்ளிக்கூட வகுப்பறை கட்டடம், அங்கன்வாடி கட்டடம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்காக மொத்தம் ரூ.3 கோடியே 74 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில், சி.வி.சண்முகம் எம்.பி நிதியுடன் சேர்த்து மொத்தம் ரூ.4.75 கோடி திட்டப்பணிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை காலை ஏத்தாப்பூர் அருகே உள்ள ஸ்ரீ முத்துமலை முருகன் கோவிலில் அணைத் பணிகளுக்கும் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பளித்தனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ முத்துமலை முருகன் கோவில் நிர்வாகி ஸ்ரீதர், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெய்சங்கரன், கெங்கவல்லி தொகுதி உறுப்பினர் நல்லதம்பி, ஏற்காடு தொகுதி உறுப்பினர் சித்ரா மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.