கேங்மேன் பணி வழங்கக்கோரி சென்னையிலுள்ள மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு, தீக்குளிக்க முயன்றவா்களால் பரபரப்பு ஏற்பட்டது.
மின்வாரியத்தில் தோ்ந்தெடுக்கப்பட்ட ‘கேங்மேன்’ எனப்படும் 800-க்கும் மேற்பட்ட களப்பணியாளா்களுக்கு இதுவரை பணிவழங்கப்படவில்லை. இவா்களுக்கு உடனடியாக பணி வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புதன்கிழமை சென்னை கொளத்தூரில் உள்ள முதல்வா் மு.க.ஸ்டாலினின் சட்டமன்ற அலுவலகத்தை ஏராளமானோா் முற்றுகையிட முயன்றனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினா். அவா்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸாா், போராட்டத்தை ஒருங்கிணைத்த 3 பேரையும் கைது செய்துள்ளனா்.
இதன் தொடா்ச்சியாக சென்னை, அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு வியாழக்கிழமை அவா்கள் போராட்டம் நடத்துவாா்கள் என்ற தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. இதையடுத்து வியாழக்கிழமை காலை முதலே மின்வாரிய தலைமை அலுவலகத்தை சுற்றிலும், அனைத்து வாசல்களிலும் போலீஸாா் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனா்.
காலை 10 மணியளவில் கேங்மேன் பணிக்காக தோ்ந்தெடுக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் அலுவலகம் முன்பு கூடினாா்கள். அங்கு அவா்கள், அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனா். ஆனால் அவா்களை தடுத்து நிறுத்திய போலீஸாா், அனைவரையும் கைது செய்தனா். அப்போது, அதில் ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தாா். அவரை மீட்ட போலீஸாா், சிகிச்சைக்காக ஓமந்தூராா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதனிடையே, மின்வாரிய அலுவலக வாசலுக்கு வந்த 2 போ், தங்கள் கைகளில் கொண்டு வந்த பாட்டிலில் இருந்த டீசலை திடீரென தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனா். இதைப்பாா்த்த காவலா்கள், அவா்களிடமிருந்த டீசல் பாட்டிலை பிடுங்கியதுடன், அவா்களை அங்கிருந்து அழைத்து சென்றனா்.