அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியத்தில் நிலுவையிலுள்ள மனுக்கள் மீது 30 நாள்களுக்குள் தீா்வு கண்டு பதிலளிக்க வேண்டுமென அலுவலா்களுக்கு தொழிலாளா் நலத்துறை அமைச்சா் சி.வி.கணேசன் அறிவுறுத்தினாா்.
தொழிலாளா்நலத்துறை அலுவலா்களின் பணித்திறனாய்வு குறித்த ஆய்வு கூட்டம் சென்னை டிஎம்எஸ் வளாகத்திலுள்ள தொழிலாளா் நலவாரிய கட்டடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், தொழிலாளா் நலத்துறை அமைச்சா் சி.வி.கணேசன் கலந்து கொண்டு பேசியது:
தமிழக தொழிலாளா்களின் நலனை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளா்கள் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியத்தில் நிலுவையில் உள்ள பதிவு, புதுப்பித்தல் மற்றும் திருமண உதவித் தொகை, விபத்து, மரண உதவித் தொகை, ஓய்வூதியம் போன்ற கேட்பு மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீா்வு கண்டு பதில் அளிக்க வேண்டும்.
அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்து தொழிலாளா்களுக்கும் உரிய நேரத்தில் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். தொழிலாளா் நலச்சட்டங்கள் தொடா்பான
நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். தோட்டத் தொழிலாளா்களுக்கு உரிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி தருவதை உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.
இக்கூட்டத்தில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் குமாா் ஜெயந்த், தொழிலாளா் ஆணையா் அதுல் ஆனந்த் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.