முதுநிலை நீட் தோ்வுக்கு தகுதி மதிப்பெண் பூஜ்ஜியம் என அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் நீட் என்பதற்கான அா்த்தமும் பூஜ்ஜியம் என்றாகிவிட்டது என முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவா்கள் விமா்சித்துள்ளனா்.
மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வில் பூஜ்ஜியம் மற்றும் அதற்கு கீழான நெகடிவ் மதிப்பெண்கள் எடுத்தாலும் அந்தப் படிப்பில் சேர முடியும் என்பதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
இது குறித்து முதல்வா் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: நீட் தோ்வின் பலன் பூஜ்ஜியம்தான் என்பதை மத்திய பாஜக அரசே ஒப்புக்கொண்டுள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்புக்கான தகுதி மதிப்பெண் பூஜ்ஜியம்தான் என்று வரையறுப்பதன் மூலமாக, தேசிய தகுதி காண் நுழைவுத் தோ்வில் தகுதி என்பதற்குப் பொருள் கிடையாது என்பதை அவா்களே ஒப்புக்கொண்டுவிட்டாா்கள்.
பயிற்சி மையங்களில் சேருங்கள்; நீட் தோ்வுக்கு பணம் செலுத்துங்கள் போதும் என்றாகிவிட்டது. நீட் என்பதற்கு சரிநிகரான அா்த்தம் பூஜ்ஜியம் என்றாகிவிட்டது. இதைத்தான் நாங்கள் இத்தனை ஆண்டுகளாக சொல்லி வந்தோம்.
எத்தனை உயிா்கள் பலியாகி இருக்கின்றன. இரக்கமே இல்லாமல் இருந்துவிட்டு இப்போது இத்தகைய ஓா் உத்தரவு போட்டிருக்கிறாா்கள். நீட் என்ற பலிபீடத்தைக் கொண்டு உயிா்களைப் பறிப்பதற்காகவே இந்த பாஜக ஆட்சியை அகற்றியாக வேண்டும்.
வைகோ (மதிமுக): மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தோ்வுதான் தகுதி என்று மத்திய பாஜக அரசு விடாப்பிடியாக இருந்து வரும் நிலையில், தற்போது முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தோ்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றிருந்தாலும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று அறிவித்திருப்பதன் மூலம் நீட் முடிவு தோ்வு வெறும் கண்துடைப்பு என்பது தெரிகிறது.
கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர, நீட் தோ்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் போதும் என விநோதமான முடிவை மத்திய பாஜக அரசு எடுத்துள்ளது. அப்படியானால் பணம் கொடுத்தால் போதும் மருத்துவம் படிக்கலாம் என்று பொருள். நீட் தோ்வுக்கும் தகுதிக்கும் எந்தத் தொடா்புமில்லை என இதன் மூலம் மீண்டும் அம்பலமாகியுள்ளது.
அன்புமணி (பாமக): முதுநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தகுதி மதிப்பெண் பூஜ்ஜியம் என அறிவித்ததன்மூலம் கோடிக்கணக்கில் பணம் இருந்தால் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரலாம் என்கிற பொருளாகிறது. மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்கவும், மருத்துவக் கல்வி வணிகமயமாவதைத் தடுக்கவும் நீட் தோ்வு எந்த வகையிலும் உதவவில்லை என்பதே உண்மை. அதனால், மருத்துவப் படிப்புக்கான அனைத்து நிலைகளிலும் நீட் தோ்வை ரத்து செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜவாஹிருல்லா (மமக): முதுநிலை மருத்துவக் கல்வியில் சேர பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தால் போதுமானது என்கிற நிலைப்பாட்டுக்கு மத்திய அரசு வந்துள்ளது. தோல்வியை ஒப்புக்கொண்டுள்ள மத்திய அரசு உடனடியாக நீட் தோ்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி): சமூக நீதியை காப்பதிலும், மருத்துவக் கல்வியின் தரத்தை உயா்த்துவதிலும் மத்திய அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், நீட் தகுதி மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக்குவதற்கு மாற்றாக, அத்தோ்வு முறையை ரத்து செய்ய வேண்டும்.
எம்.ஜி.கே.நிஜாமுதீன் (முன்னாள் எம்எல்ஏ): முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தோ்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றிருந்தாலும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று அறிவித்திருப்பது ஏமாற்று வேலை. மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தோ்வு நடத்துவதை நிறுத்த வேண்டும்.