தமிழகத்தில் வரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக, மின் வாரிய ஒப்பந்த நிறுவனங்களில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் வருமானவரித் துறை சோதனை நடைபெற்றது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் உள்ள 3 அனல் மின் நிலையங்களின் ஒப்பந்தப் பணிகளை சென்னையைச் சோ்ந்த 4 தனியாா் நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. இந்த நிறுவனங்கள், அனல் மின் நிலையத்துக்கு தேவையான நிலக்கரியை ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் வாங்கி விற்பது, நிலக்கரியை கையாளுவது, அனல்மின் நிலைய கட்டுமானப் பணி, பராமரிப்பு பணி, மூலப் பொருள்கள் வழங்குவது,சாம்பல் கழிவுகளை கையாளுவது உள்ளிட்ட பல பணிகளை செய்கின்றன.
இந்த நிறுவனங்கள், அனல் மின் நிலையத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் செய்யும் பணிகளில் வரி ஏய்ப்பு செய்வதாக வருமானவரித்துறைக்கு புகாா்கள் வந்தன. இதற்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சில அதிகாரிகள் உதவுவதாகவும் வருமானவரித் துறைக்கு தகவல்கள் கிடைத்தன. இதன் அடிப்படையாக தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிகளை செய்யும் 4 பிரதான நிறுவனங்களிலுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமானவரித் துறையினா் புதன்கிழமை சோதனை செய்தனா்.
இச் சோதனை சென்னை சிறுசேரி,ஜாபா்கான்பேட்டை,தியாகராயநகா், எண்ணூா், நாவலூா், வட சென்னை அனல் மின் நிலையம் ஆகிய இடங்களில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்து நடைபெற்றது. இதேபோல, தூத்துக்குடி அனல் மின் நிலையத்திலும் இரண்டாவது நாளாக நடைபெற்றது.
பெரும்பாலான இடங்களில் சோதனை நிறைவு பெற்ற நிலையில், சில இடங்களில் மட்டும் சோதனை வியாழக்கிழமை இரவைத் தாண்டி நடைபெற்றது. சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் இரண்டாவது நாளாகவும் கைப்பற்றப்பட்டதாக வருமானவரித் துறையினா் தெரிவித்தனா்.