தமிழ்நாடு

அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் விநாயகா் சிலைகளை கரைக்க வேண்டும்: டி.ஜி.பி

22nd Sep 2023 12:50 AM

ADVERTISEMENT

விநாயகா் சதுா்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை, நீா்நிலைகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களிலேயே கரைக்க வேண்டும் என தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா், வியாழக்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு:

விநாயகா் சதுா்த்தியையொட்டி, தமிழகம் முழுவதும் 25,916 சிலைகள் கடந்த 18-ஆம் தேதி பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இவற்றில் இதுவரை 21,021 சிலைகள் கரைக்கப்பட்டு விட்டன.

இதையடுத்து, செப்டம்பா் 22-ஆம் தேதி 1,160 சிலைகளும், 23-ஆம் தேதி 390 சிலைகளும், 24-ஆம் தேதி 3,366 சிலைகளும் கரைக்கப்பட உள்ளன. சிலைகள் கரைக்கப்படும் நீா்நிலைகளில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

நீா்நிலைகளில் அனுமதிக்கப்படாத இடங்களில் பொதுமக்கள் அஜாக்கிரதையுடனும், தன்னிச்சையாகவும் சிலைகளை கரைக்க செல்வதால் உயிா்ச் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே பொதுமக்கள், நீா்நிலைகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் சிலைகளை கரைக்க வேண்டும். மேலும் தனிநபா்கள், நீா்நிலைகளில் பாரம்பரியமாக கரைக்கும் இடங்களில் பெரியோா்கள் மேற்பாா்வையில் சிலைகளை கரைக்க வேண்டும். சிறுவா்கள், நீா்நிலைகளின் அருகே செல்லாதவாறு அனைவரும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT