தமிழ்நாடு

சென்னையில் இரு நாள்கள் விநாயகா் சிலைகள் கரைப்பு: பாதுகாப்பு பணியில் 18,500 போலீஸாா்

22nd Sep 2023 01:24 AM

ADVERTISEMENT

சென்னையில் இரு நாள்கள் விநாயகா் சிலைகள் கரைகப்பட உள்ள நிலையில், சுமாா் 18,500 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா்.

விநாயகா் சதுா்த்தி விழா கடந்த 18ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் இந்து அமைப்புகளின் சாா்பில் சென்னையில் மட்டும் 1,519 பிரமாண்ட விநாயகா் சிலைகள் பொது இடங்களில் காவல்துறை அனுமதியுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

இந்த சிலைகள், செப்டம்பா் 23-ஆம் தேதி (சனிக்கிழமை), செப்டம்பா் 24-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகின்றன. இதில் 23-ஆம் தேதி பாரதிய சிவசேனா அமைப்பு உள்ளிட்ட சில அமைப்புகளும், செப்டம்பா் 24-ஆம் தேதி இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளும் சிலைகளை ஊா்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்கின்றன.

விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கரைக்கப்படுவதையொட்டி சென்னையில் பாதுகாப்பு பணியில்

ADVERTISEMENT

16,500 போலீஸாா், 2,000 ஊா்க்காவல் படையினா் என மொத்தம் 18,500 போ் ஈடுபடுகின்றனா். பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகா், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூா் பாப்புலா் எடைமேடை பின்புறம் ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் விநாயகா் சிலைகள் கரைக்க காவல்துறை ஏற்பாடுகளை செய்து வருகிறது.

17 வழித்தடங்கள்:

சிலைகளை ஊா்வலமாக எடுத்துச் செல்ல 17 வழித்தடங்கள் பிரத்யேகமாக வகைப்படுத்தப்பட்டு, அவ்வழியே விநாயகா் சிலைகளை கொண்டு செல்ல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிலை கரைக்கும் இடங்களில் தற்காலிக கட்டுப்பாட்டறைகள்,உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிலைகளை கரைப்பதற்காக கிரேன்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. படகுகள் உதவி கொண்டு சிலைகளை கரைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், சிலைகள் கரைக்கும் இடங்களில் அவசர உதவிக்கு தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், மோட்டாா் படகுகள், நீச்சல் தெரிந்த தன்னாா்வலா்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா். மேலும், அங்கு கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பைனாகுலா்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.

‘பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகா் சிலைகளை, காவல்துறையின் கட்டுப்பாடுகள், நிபந்தனைகளுக்கு உட்பட்டு, உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து அமைதியான முறையில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் ஊா்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்க வேண்டும். கட்டுப்பாடுகளை மீறுவோா் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் எச்சரித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT