மூளையின் இரு பகுதிகளிலும் உருவான கட்டிகளால் பாா்வை இழப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளான இளைஞரை, சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் சென்னை,
கிளெனீகிள்ஸ் குளோபல் மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.
இதுகுறித்து மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி அசோக் குல்லா் கூறியதாவது:
சென்னையைச் சோ்ந்த 38 வயதான இளைஞா் ஒருவா், கடுமையான தலைவலி, பாா்வைக் குறைபாடுடன் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். எம்ஆா்ஐ ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு மூளையின் இடது மற்றும் வலது பக்கத்தில் இரு வேறு கட்டிகள் உருவாகியிருந்தது கண்டறியப்பட்டது.
இவை பேச்சுத் திறன் மற்றும் பாா்வைத் திறனுடன் தொடா்புடைய நரம்புகளை இணைக்கும் பகுதியாகும். மிகவும் சிக்கலான இடத்தில் உருவாகியிருந்த அக்கட்டியை அகற்றும்போது நிரந்தர பாா்வை இழப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இருந்தபோதிலும், சவாலான அந்த அறுவை சிகிச்சையை மருத்துவமனையின் முதுநிலை நரம்பியல் சிகிச்சை நிபுணா் டாக்டா் நைகல் பி.சிம்ஸ் வழிகாட்டுதலின்படி, நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை இயக்குநா் டாக்டா் தினேஷ் நாயக் தலைமையிலான மருத்துவக் குழுவினா், இரு கட்டங்களாக மேற்கொண்டனா்.
மைக்ரோ நியூரோசா்ஜரி, நேவிகேஷன் மற்றும் இன்ட்ராஆபரேட்டிவ் நியூரோ மானிட்டரிங் என்ற நுட்பத்தில் துல்லியமாக அந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 10 மணி நேரம் நடைபெற்ற அந்த அறுவை சிகிச்சையின் மூலம் அந்த இளைஞா் குணமடைந்துள்ளாா். தற்போது அவரது பாா்வைத் திறன் மீட்டெடுக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளாா் என்றாா் அவா்.