சேலத்தில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அக்.16-ம் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரத்தில் விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து சேலத்தில் இருந்து சென்னைக்கு ட்ரூஜெட் நிறுவனம் சார்பில் தினசரி விமான சேவை நடைபெற்று வந்தது. இதனிடையே கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் விமான சேவை நிறுத்தப்பட்டது.
விமான சேவை நிறுத்தப்பட்டு 2 ஆண்டுகள் கடந்த நிலையில், மீண்டும் விமான சேவையை தொடங்க வேண்டும் என சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.
நாடாளுமன்றத்தில் இதுகுறித்து கேள்வி எழுப்பியதுடன் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரையும் அவர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். இந்நிலையில் அடுத்த மாதம் 16-ந் தேதி முதல் சேலம் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கப்பட உள்ளததாக சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
படிக்க: மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்கலாம்!
உதான்-5 திட்டத்தின் கீழ் அக்டோபர் மாதத்தில் இருந்து சேலத்தில் இருந்து விமான சேவை தொடங்க 2 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அக்டோபர் 16-ந் தேதி முதல் அலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பெங்களூர்-சேலம்-கொச்சின் வழித்தடத்தில் விமானம் இயக்கப்பட உள்ளது. கொச்சின்-சேலம்-பெங்களூர் வழித்தடத்தில் மீண்டும் இயக்கப்படும்.
இதே போன்று அக்டோபர் மாத இறுதியில் இன்டிகோ நிறுவனம் சார்பில் பெங்களூர்-சேலம்-ஹைதராபாத் வழித்தடத்தில் விமான சேவை தொடங்கப்படுகிறது. மீண்டும் ஹைதராபாத்-சேலம்-பெங்களூர் வழித்தடத்தில் விமானம் இயக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
2 ஆண்டுகளுக்குப் பிறகு சேலத்தில் இருந்து மீண்டும் பயணிகள் விமான சேவை தொடங்கப்பட உள்ளது வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.