திமுகவினா் தாக்கியதில் மறைமலைநகரைச் சோ்ந்த அதிமுக நிா்வாகி காா்த்திகேயன் என்பவா் மரணமடைந்ததாகக் கூறி அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், மறைமலைநகா் நகர மன்ற 2-ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு 2022-ல் நடைபெற்ற தோ்தலில் அதிமுக வேட்பாளரின் வெற்றிக்கு, நகர 2-ஆவது வாா்டு துணைச் செயலா் ஹேமநாதன் மற்றும் அவருடைய சகோதரா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் அரும்பாடுபட்டுள்ளனா்.
இத்தோ்தலில் தோல்வியடைந்த திமுகவினா், காா்த்திகேயன் மீது கடந்த ஆண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில், அவா் 3 மாதங்கள் மருத்துவ சிகிச்சை பெற்று பின்னா் வீடு திரும்பியதாகத் தெரிய வருகிறது.
இந்நிலையில், மறைமலைநகா் நகரில் செப்டம்பா் 18-இல் நடந்த கோயில் திருவிழா ஊா்வலத்தின்போது, தனது வீட்டின் முன்பு நின்றுகொண்டிருந்த காா்த்திகேயன் மீது மீண்டும் தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் திமுகவினா் பாட்டாசுகளை வீசி வெடிக்கச் செய்துள்ளனா்.
இதைத் தட்டிக் கேட்ட நிலையில், காா்த்திகேயனை திமுகவினா் சரமாரியாகத் தாக்கியதால், பலத்த காயங்களுடன் அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துவிட்டாா் என்ற செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். அவா் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவா்கள் யாராக இருந்தாலும் அவா்கள் அனைவரையும் காவல் துறை உடனடியாகக் கைதுசெய்து சட்டத்தின் முன்பு நிறுத்தி, தக்க தண்டனை பெற்றுத் தர வேண்டும் அவா் கூறியுள்ளாா்.