சென்னையில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், சென்னை, புறநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் பழுதடைந்துள்ளது என்றும், தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருப்பதாகவும், பல்வேறு மாவட்டங்களிலும் சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகளிடம் முதல்வர் தெரிவித்தார்.
மேலும், மழைநீர் வடிகால், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பணிகள் காரணமாக மட்டுமல்லாமல், பொதுவாக பழைய சாலைகள் போதிய பராமரிப்பு இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும் என்றும் அமைச்சர்களும், துறை செயலாளர்களும் தீவிர கவனம் செலுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், சென்னை மணப்பாக்கம், கொளப்பாக்கம், ராம் நகர் பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து முகாம் அலுவலகத்துக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், மெட்ரோ இரயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இடங்களில் சாலை சீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படிக்க | உட்கார்ரா.. உதை வாங்கப் போற..: மக்களவையில் ஆவேசமான தயாநிதிமாறன்
இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.