தமிழ்நாடு

நெல்லை வந்தது வந்தே பாரத் ரயில்! அதிகாரிகள், மக்கள் உற்சாக வரவேற்பு

21st Sep 2023 05:11 PM

ADVERTISEMENT

தென் தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரயில் நெல்லை - சென்னை இடையே செப். 24 ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ள நிலையில் சோதனை ஓட்ட வெற்றியாக இன்று(வியாழக்கிழமை) நெல்லை வந்தடைந்தது.

வந்தே பாரத் எனப்படும் அதிவிரைவு ரயில்களின் என்ஜின்கள் தமிழகத்தில் பெரம்பூர் ஐசிஎஃப்பில் தயாரிக்கப்படுகிறது. நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகளிடையே இதற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்த ரயிலில் ஜிபிஎஸ் டிராக்கர் வசதி, கேமரா வசதி, ஏசி வசதி என அனைத்தும் உள்ளது. 

இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை- கோவை, சென்னை- மைசூர் ஆகிய இடங்களுக்கு தமிழகத்தில் இருந்து வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. 

ADVERTISEMENT

இந்த நிலையில் தமிழகத்தின் மூன்றாவது வந்தே பாரத் ரயிலாகவும் தென்தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரயிலாகவும் நெல்லை- சென்னை இடையே ரயில் இயக்கப்பட உள்ளது. 

இந்த  ரயிலை  வரும் செப். 24 ஆம் தேதி இயக்கத்  திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த், முதுநிலை வணிக மேலாளர் ரவி பிரியா, முதுநிலை கோட்ட இயக்க மேலாளர் பிரசன்னா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடக்க விழாவிற்கான மேடை அமைக்கும் இடம், ரயில் வந்து செல்லும் நடைமேடை, ரயில் பராமரிப்பு பணி மேற்கொள்ளக்கூடிய பிட் லைன், ரயில்வே முன்பதிவு கவுண்டர்கள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. 

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் முதற்கட்டமாக விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நடைபெறும் தொடக்க விழா காணொளி காட்சிக்கு அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்ட ரயில் மாலை 3:45 மணிக்கு நெல்லை ரயில் நிலையத்துக்கு வந்தடைந்தது.

ரயிலை பொதுமக்கள் மற்றும் ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் வரவேற்றனர். வந்தே பாரத் ரயில் இயக்கப்படவிருப்பதையடுத்து நெல்லை மற்றும் அண்டை மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT