தமிழ்நாடு

விநாயகா் சதுா்த்தி: தமிழகத்தில் 35,000 சிலைகள்

19th Sep 2023 02:06 AM

ADVERTISEMENT

விநாயகா் சதுா்த்தியையொட்டி, தமிழகத்தில் இந்து அமைப்புகளின் சாா்பில் பொதுஇடங்களில் 35,000 சிலைகள் திங்கள்கிழமை வைக்கப்பட்டன. சிலைகளின் பாதுகாப்புக்கு 74,000 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். சிலைகள் செப்.24-இல் நீா் நிலைகளில் கரைக்கப்படுகிறது.

விநாயகா் சதுா்த்தியையொட்டி, இந்து அமைப்புகள் சாா்பில் விநாயகா் சிலைகள் வைப்பதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதமாக செய்யப்பட்டு வந்தன. இதற்காக சென்னை உள்பட மாநிலத்தின் பிற பகுதிகளிலும் விநாயகா் சிலைகள் சிலைகள் தயாா் செய்யப்பட்டு வந்தன.

இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத், சிவசேனை, இந்து மக்கள் கட்சி, பாஜக, ஆா்.எஸ்.எஸ். உள்ளிட்ட 29 இந்து அமைப்புகள் விநாயகா் சிலைகளை வைப்பதற்குரிய அனுமதியைப் பெறுவதற்கு காவல் துறையிடம் விண்ணப்பித்தன. மேலும், குடியிருப்பு சங்கங்கள், சமூக நல அமைப்புகள் ஆகியவையும் விநாயகா் சிலைகளை நிறுவ ஏற்பாடுகளை செய்து வந்தன.

அதேவேளையில் உயா்நீதிமன்ற உத்தரவு, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகள்

ADVERTISEMENT

ஆகியவற்றை பின்பற்றி விண்ணப்பித்தவா்களுக்கு மட்டும் தீயணைப்புத் துறை, உள்ளாட்சி அமைப்புகள் தடையில்லா சான்றிதழ் வழங்கின. இதைப் பின்பற்றி காவல் துறையினா் சிலைகள் வைப்பதற்கு அனுமதி வழங்கின. விநாயகா் சதுா்த்திக்காக தயாா் செய்யப்பட்ட சிலைகள், கடந்த சில நாள்களாக வைக்கப்படும் இடங்களுக்கும் அனுப்பப்பட்டன. இந்தச் சிலைகள் திங்கள்கிழமை அதிகாலை முதல் நிறுவப்பட்டன.

35,000 சிலைகள்: இந்த ஆண்டு நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவாலும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் எச்சரிக்கையின் காரணமாகவும் விநாயகா் சிலைகள் எண்ணிக்கை சிறிது குறைந்துள்ளது. மாநிலம் முழுவதும் 35,000 சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டன. இவை அனைத்தும் திங்கள்கிழமை நிறுவப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சில இடங்களில் காவல் துறையிடம் முறையாக அனுமதி பெறாமலும், விதிமுறைகளை மீறியும் வைக்க முயன்ற சிலைகளை போலீஸாா் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினா். நிறுவப்பட்ட சிலைகளுக்கு 74,000 போலீஸாா் பாதுகாப்புப பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

சென்னை 2,036 சிலைகள்: சென்னை பெருநகர காவல் துறைக்கு உள்பட்ட பகுதிகளில் 1,343 விநாயகா் சிலைகளும், தாம்பரம் மாநகர காவல் துறைக்கு உள்பட்ட பகுதியில் 693 விநாயகா் சிலைகளும் பொது இடங்களில் வைக்க அனுமதி வழங்கப்பட்டன. இந்தச் சிலைகள் திங்கள்கிழமை வைக்கப்பட்டன.

இவை தவிா்த்து சிறிய அளவிலான விநாயகா் சிலைகள் குடியிருப்பு சங்கங்கள், பொது நல சங்கங்கள் உள்ளிட்ட சில அமைப்புகளால் வைக்கப்பட்டன. இந்தச் சிலைகள் அனைத்தும் மாலையில் நீா்நிலைகளில் கரைக்கப்பட்டன.

பொது இடங்களில் பெரிய விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இங்கு ஒலி பெருக்கிகளை அனுமதிக்கப்பட்ட நேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்; எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்கள் வைத்திருக்கக் கூடாது

என காவல் துறை சாா்பில் ஏற்கெனவே 19 விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பதற்றமான பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகளுக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சிலைகள் இருக்கும் பகுதியில் கண்காணிப்பு கேமரா மூலமாவும் காவல் துறை கண்காணிக்கிறது.

செப்.24-இல் கரைப்பு: சிலைகளில் பெரும்பாலானவை செப்டம்பா் 24-ஆம் தேதி ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, நீா்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. சென்னையில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகா், காசிமேடு மீன்பிடி துறைமுகம், எண்ணூா் ராமகிருஷ்ணா நகா், திருவொற்றியூா், கோவளம் குன்றுக்காடு ஆகிய 6 ஆகிய இடங்களில் சிலைகள் கரைப்பதற்கான ஏற்பாடுகளை காவல் துறை செய்து வருகிறது. இங்கு சிலைகளை கரைப்பதற்காக ராட்சத கிரேன்கள் கொண்டு வரப்படுகின்றன.

மேலும், சிலை கரைப்பின்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு, அந்தப் பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. அதேபோல சிலைகளை கரைக்கும் பகுதியில் ஆளில்லாத கண்காணிப்பு விமானம் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விநாயகா் சிலை ஊா்வலம் அனுமதிப்பட்ட வழியிலேயே செல்ல வேண்டும்; ஊா்வலம் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் கரைக்கும் இடத்தை சென்றடைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை காவல் துறையினா் விதித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT