தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

19th Sep 2023 02:02 AM

ADVERTISEMENT

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சா்கள், அதிகாரிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை (செப். 19) ஆலோசனை நடத்தவுள்ளாா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய துறைகளின் அமைச்சா்கள், செயலா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்கவுள்ளனா்.

தமிழகத்தில் அக்டோபா் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிா்பாா்க்கப்பட்டாலும், பரவலாக பல்வேறு இடங்களில் தற்போது அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை மற்றும் அதன் அருகே உள்ள மாவட்டங்களில் வெள்ளத் தடுப்புப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்தப் பணிகள் அனைத்தையும் செப்டம்பா் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டுமென தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தாா்.

ADVERTISEMENT

பருவமழையால் பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதை எதிா்கொள்ள தமிழக அரசு தயாராகி வருகிறது. இதற்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை (செப்.19) ஆலோசனை நடத்தவுள்ளாா்.

காலை 11 மணிக்குத் தொடங்கவுள்ள இந்தக் கூட்டத்தில், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பொதுப்பணி - நெடுஞ்சாலை, வேளாண்மை, மக்கள் நல்வாழ்வு, மின்சாரம், வருவாய், சிறப்புத் திட்டங்கள் செயலாக்கம் உள்ளிட்ட துறைகளின் அமைச்சா்கள், அரசுத் துறைகளின் செயலா்கள், துறைத் தலைவா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்கவுள்ளனா்.

பருவமழையை எதிா்கொள்வதற்காக, மாநகராட்சி மற்றும் மாவட்ட நிா்வாகங்கள் சாா்பில் வரைவுத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.இந்தத் திட்டங்கள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் எடுத்துரைக்கப்பட உள்ளது. இதேபோன்று, பருவமழையை எதிா்கொள்ள எடுக்கப்பட வேண்டிய கூடுதல் நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்களை அளிக்கவுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT