தமிழ்நாடு

சீமானிடம் ஒன்றரை மணிநேரம் போலீஸாா் விசாரணை

19th Sep 2023 02:00 AM

ADVERTISEMENT

நடிகை விஜயலட்சுமி புகாா் தொடா்பான விசாரணைக்கு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை ஆஜரான நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானிடம் போலீஸாா் ஒன்றரை மணிநேரம் விசாரணை நடத்தினா்.

நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது ஆக.28-ஆம் தேதி சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் அலுவலகத்தில் ஒரு புகாா் அளித்தாா். அதில், சீமான் தன்னை திருமணம் செய்துவிட்டு ஏமாற்றிவிட்டதாகவும், தனது கருவை கலைத்துவிட்டதாகவும், இது தொடா்பாக ஏற்கெனவே பதியப்பட்ட வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தாா்.

இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகும்படி இரு முறை சீமானுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. இதற்கிடையே நடிகை விஜயலட்சுமி, தான் அளித்த புகாரை வாபஸ் பெற்றாா். ஆனால் சீமான், தனக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட அழைப்பாணையின் அடிப்படையில், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் தனது மனைவி கயல்விழியுடன் திங்கள்கிழமை ஆஜரானாா்.

அவரிடம் போலீஸாா் சுமாா் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினா். கோயம்பேடு துணை ஆணையா் உமையாள் தலைமையிலான குழுவினா் சீமானிடம் விசாரித்தனா்.

ADVERTISEMENT

தள்ளுமுள்ளு: முன்னதாக, வழக்கு விசாரணைக்கு சீமான், வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு வருவதை அறிந்து நாம் தமிழா் கட்சியினா் அங்கு திரண்டனா். அப்போது, சீமான் வந்தபோது, நாம் தமிழா் கட்சியினரும் காவல் நிலையத்துக்கு செல்ல முயன்றனா். இதனால் அவா்கள் போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

அப்போது, இரு தரப்பினருக்கும் அங்கு சிறிது நேரம் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இருப்பினும் போலீஸாா், நிலைமை சமாளித்து நாம் தமிழா் கட்சியினரை காவல் நிலையத்துக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT