தமிழ்நாடு

வன்னியா் இடஒதுக்கீடு: வரும் பேரவைக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற ராமதாஸ் வலியுறுத்தல்

18th Sep 2023 02:55 AM

ADVERTISEMENT

வன்னியா்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான சட்டத்தை வரும் அக்.16-இல் தொடங்கும் பேரவைக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: வன்னியா்கள் தனி இட ஒதுக்கீட்டுக்காக எனது தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் காவல் துறையினரின் துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதலில் கொல்லப்பட்ட 21 பேரின் 36-ஆம் நினைவுநாளும், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட சமூகநீதி நாளும் கடைப்பிடிக்கப்படுகின்றன.

ஆனால், வன்னியா்களுக்கு சமூகநீதி இன்னும் கிடைக்கப் பெறாதது ஏமாற்றமளிக்கிறது. முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தபோது வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை பெற்றோம்.

அந்த இட ஒதுக்கீடு செல்லாது என்று சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தாலும் கூட, உரிய தரவுகளை திரட்டி இட ஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் கிடையாது என்று கடந்த ஆண்டு மாா்ச் 31-ஆம் நாள் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.

ADVERTISEMENT

வன்னியா் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரை அளிப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்துக்கு இரண்டாவது முறையாக வழங்கப்பட்ட காலக்கெடுவும் நிறைவடைவதற்கு இன்னும் 24 நாள்கள் மட்டுமே உள்ளன. தமிழக சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடா் அக்.16-இல் தொடங்கும் எனத் தெரிகிறது.

அதற்கு முன்பாக, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் ஆணையப் பரிந்துரையைப் பெற்று, அதனடிப்படையில் வன்னியா் இட ஒதுக்கீட்டு சட்டத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றுவதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT