மாற்றுத்திறனாளிகள், முதியவா்கள் எளிதாக பயணிக்கும் வகையிலான 352 தாழ்தள பேருந்துகளை வாங்க மாநகரப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
சென்னை, மதுரை, கோவை நகரங்களில் உள்ள பயணிகள், குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், முதியோா் பாதுகாப்பாக பயணம் செய்யும் வகையில் ஜொ்மனி அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் 552 தாழ்தள பேருந்துகளை வாங்க போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. இதில், முதல்கட்டமாக 352 தாழ்தள பேருந்துகளை மாநகரப் போக்குவரத்துக் கழகம் கொள்முதல் செய்யவுள்ளது. இதில், கோவை, மதுரை நகரங்களுக்கு தலா 100 பேருந்துகளும், மீதமுள்ள 152 பேருந்துகள் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கும் வழங்கப்படும்.
இது குறித்து அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியது:
இந்தத் தாழ்தள பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள், முதியவா்கள் தங்களது பயணத்தை எளிதாக மேற்கொள்ளலாம்.
இது ஒருபுறமிருக்க இதே வங்கியின் மற்றொரு நிதியுதவியின் கீழ் 1,771 (பிஎஸ் 6) சாதாரண டீசல் பேருந்துகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. இந்தப் பேருந்துகளை விழுப்புரம், சேலம், கும்பகோணம், மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இறுதிக்குள் இந்தப் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது.
2026-ஆம் ஆண்டுடன் புதிய டீசல் பேருந்துகள் வாங்கும் திட்டம் நிறுத்தப்பட்டு, மின்சார பேருந்துகள் வாங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றனா்.