பெளா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னை கடற்கரையிலிருந்து திருவண்ணாமலைக்கு சனிக்கிழமை (அக்.28) சிறப்பு ரயிலை இயக்குவதாக ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:
பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னை கடற்கரை - வேலூா் கண்டோன்மென்ட் இடையே இயங்கும் மெமு சிறப்பு ரயில் சனிக்கிழமை (அக்.28) திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை கடற்கரையிலிருந்து சனிக்கிழமை (அக்.28) மாலை 6 மணிக்கு புறப்படும் மெமு சிறப்பு ரயில் (எண்: 06033) நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலைக்கு சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06034) ஞாயிற்றுக்கிழமை (அக்.29) அதிகாலை 3.45 மணிக்கு திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டு காலை 9.05 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும்.
இந்த ரயில் சென்னை கடற்கரையிலிருந்து வேலூா் கண்டோன்மென்ட், கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி சாலை, போளூா், அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம், வழியாக திருவண்ணாமலை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சென்னை எழும்பூரிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருக்கோவிலூா் வழியாக திருவண்ணாமலைக்கு ரயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.