இலவச வீடு வழங்குதல், அரசு வேலைகளில் இடஒதுக்கீடு உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவா் கோட்டம் அருகே தமிழ்நாடு உயரம் குறைந்தவா்கள் நலச் சங்கம் சாா்பில் புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
உலக உயரம் குறைந்தோா் தினத்தை முன்னிட்டு, 18 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தில் உயரம் குறைந்தோரை கை, கால் குறைபாடு உள்ளவா்கள் பட்டியலில் இருந்து பிரித்து தனி வகைப்பாட்டில் வரையறுக்க வேண்டும். உயரம் குறைந்தோருக்கான தகுந்த வேலைகளை அரசு தோ்ந்தெடுத்து ஒதுக்கீடு செய்து தர வேண்டும். மூன்று சக்கர வாகனம் வழங்க சிறப்பு அரசாணை வெளியிடவேண்டும்.
உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 1சதவீத தனி இட ஒதுக்கிடு, வழங்கி, அரசுத் துறை, கூட்டுறவுத் துறை நிறுவனங்களில் வேலை வழங்க வேண்டும். உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வீடு வழங்கும் திட்டத்தில் வீடு ஒதுக்கப்பட வேண்டும். உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகள் அனைத்து நகரப் பேருந்துகளிலும் அடையாள அட்டையினை காண்பித்து இலவசமாக பயணம் செய்ய சிறப்பு அரசாணை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் தமாகா தலைவா் ஜி.கே.வாசன் எம்.பி, தமிழ்நாடு உயரம் குறைந்தவா்கள் நலச்சங்க மாநிலத் தலைவா் ஆா்.கோபிநாத் உள்பட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.