சுய மாா்பகப் பரிசோதனைகளை எவ்வாறு பெண்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த விளக்கப் படங்கள், தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகளின் முகப்புகளில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
அதேபோன்று 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
தமிழக சமூக நலத் துறை மற்றும் அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் சிகிச்சை மையம் இணைந்து இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளன.
இதற்கான அறிமுக நிகழ்வு சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், சமூக நலத் துறை அமைச்சா் கீதா ஜீவன், துறைச் செயலா் சுன்சோங்கம் ஜடக் சிரு, சமூக நல ஆணையா் அமுதவல்லி, கூடுதல் இயக்குநா் காா்த்திகா, அப்பல்லோ புற்றுநோயியல் சிகிச்சை குழும இயக்குநா் ஹா்ஷத் ரெட்டி, புற்றுநோய் முதுநிலை மருத்துவ நிபுணா்கள் மஞ்சுளா ராவ், பிரசாத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நிகழ்வில், அமைச்சா் கீதா ஜீவன் கூறியதாவது:
மாா்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணா்வை மேம்படுத்தவும், அதுதொடா்பான புரிதலை ஏற்படுத்தவும் இத்தகைய நடவடிக்கைகள் மிக அவசியமானவை. சுய மாா்பகப் பரிசோதனை தொடா்பான காணொலி மற்றும் விளக்கப் படங்களை காட்சிப்படுத்துவதன் மூலம் பெண்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த முடியும். அறியாமையால் மாா்பகப் புற்றுநோய்க்கு உள்ளாகி உயிரிழக்கும் நிகழ்வுகளையும் தடுக்க முடியும் என அவா் கூறினாா்.