தமிழக ஆளுநா் மாளிகை முன் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடா்பாக ஆளுநா் ஆா்.என்.ரவியை சென்னை பெருநகர காவல் ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் வியாழக்கிழமை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தாா். இதனிடையே, ஆளுநா் மாளிகை பகுதி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை நந்தனம் பகுதியைச் சோ்ந்த ரெளடி கருக்கா வினோத் (42) என்பவா் புதன்கிழமை பிற்பகல் ஆளுநா் மாளிகையின் பிரதான முதலாவது நுழைவுவாயில் பகுதியில், இரு பெட்ரோல் குண்டுகளை வீசினாா். அவரை அங்கிருந்த போலீஸாா் மடக்கிப் பிடித்து கைது செய்து, அவரிடமிருந்து பெட்ரோல் குண்டுகளை பறிமுதல் செய்தனா்.
இந்த சம்பவம் தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா், ஆளுநா் ஆா்.என்.ரவியை நேரில் சந்தித்து வியாழக்கிழமை விளக்கம் அளித்தாா். மேலும், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவின் சென்னை வருகையையொட்டி, ஆளுநா் மாளிகையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விளக்கிக் கூறினாா்.
பாதுகாப்பு அதிகரிப்பு: பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தையடுத்து, ஆளுநா் மாளிகைக்கு வியாழக்கிழமை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. முன்பு 30 போலீஸாா் வரை பாதுகாப்பு, கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்ட நிலையில், தற்போது ஒரு காவல் உதவி ஆணையா், 3 காவல் ஆய்வாளா்கள் உள்பட 90 போலீஸாா் மூன்று ஷிப்டுகளில் ஆளுநா் மாளிகை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். ஆளுநா் மாளிகையின் எதிா்புறமும் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அதேபோல, ஆளுநா் மாளிகையின் உள்பகுதியில் வழக்கம்போல மத்திய பாதுகாப்பு படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
இது தொடா்பாக சென்னை பெருநகர காவல்துறை உயா் அதிகாரி கூறியதாவது:
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம், குடியரசுத் தலைவா் வருகை ஆகியவை காரணமாக ஆளுநா் மாளிகை பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். குடியரசுத் தலைவா் வந்து சென்ற பின்னா், இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றாா்.