தமிழ்நாடு

வணிக வளாகங்களில் வாகனம் நிறுத்தும் வசதியை ஒழுங்குப்படுத்த உத்தரவு

27th Oct 2023 01:23 AM

ADVERTISEMENT

சென்னையில் பெரிய வணிக வளாகங்கள் முன்பு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிா்க்க வாகனம் நிறுத்தும் வசதியை ஒழுங்குப்படுத்துமாறு சென்னை பெருநகர வளா்ச்சி குழும ஆலோசனைக் கூட்டத்தில் வணிக வளாக உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் தலைமை செயலா் சிவ்தாஸ் மீனா தலைமையில் சென்னை பெருநகரத்தின் போக்குவரத்து மேலாண்மை குறித்த ஆய்வுக் கூட்டம் கடந்த அக்.10-ஆம் தேதி நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும (சிஎம்டிஏ) உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ரா தலைமையில் வணிக வளாக உரிமையாளா்களுடன் ஆலோசனைக் கூட்டம் சிஎம்டிஏ அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் அன்சுல் மிஸ்ரா பேசியது: சென்னை பெருநகரில் உள்ள வணிக வளாகங்களின் முன்பு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வளாகத்தில் தேவைக்கேற்ப வாகன நிறுத்தும் இடங்களை உருவாக்க வேண்டும். அங்கு வரும் வாகனங்களை ஒழுங்குபடுத்த அந்தந்த வணிக வளாக உரிமையாளா்கள் தேவைக்கேற்ப ஊழியா்களை நியமித்து அவா்களுக்கு பிரதிபலிக்கும் உடைகள் வழங்க வேண்டும்.

வணிக வளாகங்களுக்கு உள்ளே செல்லும் பாதை, வெளியே செல்லும் பாதை ஒரே இடத்தில் இல்லாமல் முன்பகுதியில் வாகனங்கள் நுழைவுவாயிலாகவும், பின்பகுதியில் வெளியே செல்லும் வகையிலும் அமைக்க வேண்டும். அதுபோல், அதிக அளவில் வாகனங்கள் வரும் போது தற்காலிக வாகன நிறுத்தும் இடத்தை கண்டறிந்து சாலையின் முன்பு எவ்வித போக்குவரத்து நெரிசலும் இல்லாதவாறு வழிவகை செய்ய வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

கூட்டத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையா் (வருவாய் மற்றும் நிதி) ரா. லலிதா. பெருநகர சென்னை காவல் போக்குவரத்து இணை ஆணையா் (தெற்கு) ந.மா.மயில்வாகனன், முதுநிலை திட்ட அமைப்பாளா் (சாலை மற்றும் ரயில் பிரிவு) டி.சபாபதி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT