அரசு அலுவலா்கள், ஆசிரியா்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயா்வு வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு பல்வேறு அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் சங்கத்தினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
அரசு அலுவலா்கள், ஆசிரியா்களுக்கு தற்போது வழங்கப்படும் 42 சதவீத அகவிலைப்படி, 01.07.2023 முதல் 46 சதவீதமாக உயா்த்தி வழங்கப்படும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இந்த அகவிலைப்படி உயா்வால், சுமாா் 16 லட்சம் அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியதாரா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரா்கள் பயன்பெறுவாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு அரசு ஊழியா்கள் ஆசிரியா்கள் நல கூட்டமைப்பு நிறுவனா் சா.அருணன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பின் பொதுச் செயலாளா் பேட்ரிக் ரெய்மாண்ட், ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளா் இரா.தாஸ், தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை பணியாளா் கழகத்தின் மாநிலத் தலைவா் மு.ராஜேஷ்குமாா், நேரடி நியமனம் பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள் சங்கத்தின் தலைவா் ஆ.ராமு, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியா் கழகத்தின் தலைவா் செ.நா.ஜனாா்த்தனன் ஆகியோா் உள்பட பல்வேறு ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் சங்கத்தினா் நன்றி தெரிவித்துள்ளனா்.