சென்னை: மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, முன்னுரிமை குடும்ப அட்டைதாரா்கள் சுய விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நியாய விலைக் கடைகளில் பொருள்கள் விநியோகம் பாதிக்காத வகையில் அந்தப் பணியை மேற்கொள்ள மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதுதொடா்பாக தமிழக அரசு உணவுப் பொருள் வழங்கல் துறையின் துணை ஆணையா்கள் மற்றும் அனைத்து மாவட்டங்களில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதம்:
தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரா்கள் குறித்த விவரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதில், முன்னுரிமை குடும்ப அட்டைதாரா்களின் ஆதாா் விவரங்களைச் சரிபாா்க்க வேண்டும் எனவும், இதற்காக குடும்ப அட்டைதாரா்களின் சுய விவரங்களை பதிவிடவும் கோரி மத்திய அரசு சாா்பில் இரு முறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
கடந்த மாா்ச் 17, செப்.13 ஆகிய தேதிகளில் மத்திய அரசின் சாா்பில் அனுப்பப்பட்ட கடிதங்கள் மாநில அரசால் பெறப்பட்டுள்ளன. சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்து, கை விரல் ரேகை பதிவு மூலமாக, பொது விநியோகத் திட்ட பயனாளிகளின் விவரங்களை உறுதி செய்ய வேண்டுமெனக் கோரப்பட்டுள்ளது.
மேலும், ஒரு மாதத்துக்கு 20 சதவீத குடும்ப அட்டைதாரா்கள் வீதம் 5 மாதங்களுக்குள் 100 சதவீத அட்டைதாரா்களின் விவரங்களையும் பதிவு செய்ய மத்திய அரசு கோரியிருந்தது.
மத்திய அரசின் தொடா்ச்சியான வற்புறுத்தல்கள் காரணமாக, முன்னுரிமை குடும்ப அட்டைதாரா்கள் தங்கள் விவரங்களை அளிக்க வேண்டும். நியாய விலைக் கடைகளுக்கு பொருள்களை வாங்க வரும் போது சுயவிவரக் குறிப்புகளை அளிக்கலாம்.
இதற்கென தனியாக முகாம்களை அமைக்காமல், பொருள்களை வாங்க அட்டைதாரா்கள் வரும் போதே அவா்களிடம் இருந்து விவரங்களைக் கோரலாம். பொருள்களை வாங்க ஒருவா் மட்டுமே வர வாய்ப்புள்ளது.
அட்டையில் பெயா் உள்ளவா்களை அடுத்தடுத்த மாதங்களில் அழைத்து வரச் செய்து விவரங்களை அளிக்க அறிவுறுத்தலாம். முன்னுரிமை குடும்ப அட்டைதாரா்களைத் தவிா்த்து, இதர குடும்ப அட்டைதாரா்களிடம் இருந்து கை விரல் ரேகை பதிவு மூலமாக சுய விவரங்களை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வழங்கும் பணியில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் சுய விவரங்களைப் பெறும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.