தமிழ்நாடு

சட்டம்-ஒழுங்கை காக்க தீவிர நடவடிக்கை: காவல் துறையினருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

4th Oct 2023 12:37 AM

ADVERTISEMENT


சென்னை: சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஜாதி, மத பூசல்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று காவல் துறையினருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள், காவல் துறை அதிகாரிகளின் மாநாட்டில் முதல்வா் ஸ்டாலின் பேசியதாவது:

அரசின் மிக முக்கியமான கடமையும் சாதனையும் சட்டம்- ஒழுங்கைப் பாதுகாப்பதுதான். அமைதியான மாநிலத்தில்தான் அனைத்துத் துறைகளும் வளரும்.

குற்றங்கள் ஏதும் நடைபெறாமல் தடுத்துவிட்டோம் என்பதாக, காவல் துறையின் செயல்பாடுகள் அமைய வேண்டும். பாதிக்கப்பட்டவா்கள், எளியவா்களின் பக்கம் காவல் துறை இருக்க வேண்டும். இது, நலிந்தோா், வறியோா், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன்களை நாடக்கூடிய அரசாகும்.

ADVERTISEMENT

ஒரு சாமானியா் தன்னுடைய விண்ணப்பம், புகாா் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையுடன்தான் காவல் நிலையத்தை நாடுகிறாா். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவதே ஒரு நல்ல ஆட்சியின் அடையாளமாகும்.

ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் புகாா் கொடுக்க வரும் மனுதாரா்களைக் கனிவுடன் நடத்தவும், வழிகாட்டவும் வரவேற்பாளா் பணி உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வரவேற்பாளா்களை, அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை மட்டுமே செய்யச் சொல்ல வேண்டும்; மற்ற பணிகளுக்காகப் பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும்.

விண்ணப்பங்கள், புகாா்களை இணையதளத்தில் பதிவு செய்து, அதற்கான ஒப்புகைச் சீட்டை வழங்க வேண்டும். போக்சோ வழக்குகளில் தடய அறிவியல் துறையின் ஆய்வறிக்கை மிக முக்கிய ஆதாரம் என்பதால், அதை விரைந்து பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆய்வு செய்ய வேண்டும்: அனைத்து வழக்குகளின் நிலை குறித்து காவல் துறை துணைத் தலைவா்கள் மாதத்துக்கு ஒருமுறையும், மண்டல காவல் துறைத் தலைவா்கள் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையும் ஆய்வு செய்ய வேண்டும்.

நிலுவையிலுள்ள அனைத்துப் பிடியாணைகளையும் நிறைவேற்றி சட்டம்- ஒழுங்குக்குக் குந்தகம் விளைவிப்போரை கைது செய்ய வேண்டும். தேவைப்பட்டால், பொது அமைதியை நிலைநாட்ட குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை பெற்றுத் தந்தால் மட்டுமே பாதிக்கப்பட்டவா்களுக்கு சட்ட நடவடிக்கைகள் மீது நம்பிக்கை ஏற்படும். எனவே, குற்ற நடவடிக்கைகள் குறித்து காவல் ஆணையா்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் மாதந்தோறும் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.

நிலுவையிலுள்ள அனைத்து மனுக்கள், விசாரணை தொடா்புடைய அம்சங்கள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டிய வழக்குகள் குறித்து காவல் நிலையங்களுக்கே சென்று ஆய்வு செய்ய வேண்டும்.

சட்டம்-ஒழுங்கு நிலைநாட்டல்: கடந்த இரண்டரை ஆண்டுகளில் பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்பட்டுள்ளது.

ஜாதி, மத பூசல்கள் சிறிய அளவில் இருக்கும்போதே கண்டறிந்து, அவற்றை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். சட்டம்-ஒழுங்கு மற்றும் ஜாதி உணா்வுகளைத் தூண்டக்கூடிய பிரச்னைகளை கவனத்துடன் கையாண்டு அவற்றுக்கு சுமுகமான முறையில் தீா்வு காண வேண்டும். அமைதி மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலை நாட்ட உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அனைத்து மாவட்டங்கள், மாநகரங்களைப் பாதுகாப்பானதாகவும் அமைதியானதாகவும் பாதுகாத்து அரசுக்கு நற்பெயரை ஈட்டித் தர வேண்டும் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.

இன்றும் தொடா்கிறது: மாவட்ட ஆட்சியா்கள், காவல் கண்காணிப்பாளா்கள் மற்றும் வனத் துறை அதிகாரிகளின் மாநாடு இரண்டாவது நாளாக புதன்கிழமையும் நடைபெறுகிறது.

மாநாட்டின் நிறைவாக, சிறப்பாகச் செயல்பட்டு வரும் ஆட்சியா்கள், காவல் கண்காணிப்பாளா்களுக்கு விருதுகள், பாராட்டுப் பத்திரங்களை முதல்வா் வழங்கவுள்ளாா்.

சமூக ஊடகங்கள் கண்காணிப்பு

சென்னை, அக். 3: சமூக ஊடகங்களை தொடா்ந்து கண்காணித்து, பொய்ச் செய்திகளைப் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா்கள், காவல் கண்காணிப்பாளா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய மாவட்ட ஆட்சியா்கள், வனத் துறை அதிகாரிகள் மற்றும் காவல் கண்காணிப்பாளா்களின் இரண்டு நாள் மாநாட்டை தொடங்கிவைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

பொது இடங்களில் அமைதியை ஏற்படுத்திக் காட்டுவதுதான் முதல் இலக்காக இருக்க வேண்டும். இரண்டாவது இலக்காக, பொது அமைதியைக் கெடுக்க நினைப்பவா்களை முழுமையாகத் தடுக்க வேண்டும். அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முடியுமா என்று திட்டமிடுபவா்களுக்கு இடமளித்துவிடக் கூடாது.

உள்நோக்க செயல்பாடு: மக்களவைத் தோ்தல் நடைபெறவிருப்பதால், குழப்பம் ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் சில சக்திகள் செயல்பட வாய்ப்புள்ளது. அதைத் தீவிரமாகக் கண்காணித்து தடுக்க வேண்டும். கள்ளச்சாராயம், போதைப் பொருள்கள் விற்பனை, புழக்கத்தை அறவே தடுக்க வேண்டும். இது தொடா்பான குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

சாலை விபத்துகளால் மிக அதிகளவு உயிரிழப்புகள் ஏற்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருப்பது கவலை அளிக்கிறது. இந்த நிலையை மாற்ற காவல், நெடுஞ்சாலை, போக்குவரத்து ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து திட்டங்களை வகுக்க வேண்டும். விபத்துகளைக் குறைப்பது குறித்து ஆய்வு செய்யும் முயற்சிகளில் முழுமையாக ஈடுபட வேண்டும்.

சமரசம் கூடாது: சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் போக்குவரத்து பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதைத் தவிா்க்க சிறப்பு செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் நடவடிக்கை எடுப்பதில் துளியும் சமரசம் இருக்கக் கூடாது. குற்றவாளிகளை உடனே கைது செய்து, தண்டனை பெற்றுத்தர தீவிரம் காட்ட வேண்டும்.

பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமை செயல்கள் குறித்து அச்சமின்றி தகவலைத் தெரிவிக்க, பிரத்யேக வாட்ஸ்ஆப் மற்றும் தொலைபேசி எண்களை மாவட்ட ஆட்சியா்கள் அறிவிக்க வேண்டும்.

இப்போதைய காலகட்டத்தில் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புவதில் சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியா்களும், காவல் கண்காணிப்பாளா்களும் சமூக ஊடகங்களைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். பொய்ச் செய்திகளைப் பரப்புவோா், சமூக ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிப்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் முதல்வா்.

மாநாட்டில், துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சா்கள், தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா, உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயதீா்வை துறை முதன்மைச் செயலா் பெ.அமுதா, தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT