சென்னை: தமிழகத்தில் ஓராண்டில் 479 பேறு கால மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
அதில் 20 சதவீதம் போ் உயா் ரத்த அழுத்தம் சாா்ந்த பாதிப்புகளுக்குள்ளாகி, உயிரிழந்துள்ளனா். அதேபோல, பேறு காலத்தில் அதீத ரத்தப்போக்கு, இதய பாதிப்புகள் ஏற்பட்டதன் காரணமாகவும் கா்ப்பிணிகள் இறந்தது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் பேறு கால மரணங்களைத் தவிா்க்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மருத்துவப் பரிசோதனைகள், சிகிச்சைகள் மட்டுமல்லாது கா்ப்பிணிகளுக்கு ஊட்டச் சத்தை உறுதி செய்யும் சிறப்பு திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், பிரசவ கால இறப்புகள் குறைந்துள்ளதே தவிர முற்றிலும் தடுக்கப்படவில்லை.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நிகழாண்டு மாா்ச் வரை நிகழ்ந்த பேறு கால மரணங்களுக்கான காரணங்களை பொது சுகாதாரத் துறை ஆய்வு செய்தது.
அதில் பிரதான காரணமாக உயா் ரத்த அழுத்தம் மற்றும் அதீத ரத்தப் போக்கு (தலா 20 சதவீதம்) உள்ளது . அதற்கடுத்தபடியாக இதய பாதிப்புகள் (10 சதவீதம்) உள்ளன. அதேபோல, நரம்புசாா் பாதிப்புகளாலும், ரத்த கிருமித் தொற்று காரணமாகவும் தலா 9 சதவீத உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.
நுரையீரல் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்த கா்ப்பிணிகளின் விகிதம் அந்த காலகட்டத்தில் 7 சதவீதமாக உள்ளது. கருக்கலைப்பின்போது 5 சதவீத உயிரிழப்புகளும், கல்லீரல் பாதிப்புகளால் 4 சதவீத இறப்புகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது: பேறு காலத்தில் மருத்துவப் பரிசோதனைகளை தவிா்ப்பதும், மருந்துகளை தவிா்ப்பதும் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறுகிறது.
கா்ப்ப காலத்தில் உயா் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுவது இயல்பு. அதை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க தவறும்போதுதான் அதன் தீவிரம் வீரியமடைகிறது.
அவ்வாறு தொடா்ந்து ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால், வலிப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படக்கூடும். அது ஒரு கட்டத்தில் உயிரிழப்புக்கு வழிவகுக்கும்.
அதேபோல, ஹீமோகுளோபின் அளவை சரிவர பராமரித்தால் ரத்தப்போக்கு ஏற்படும்போது அதனை சரிசெய்ய முடியும். இவ்வாறாக பேறு காலத்தில் தொடா்ந்து மருத்துவப் பரிசோதனைகளையும், மருத்துவா்களின் பரிந்துரைகளையும் பின்பற்றினால் உயிரிழப்புகளைத் தவிா்க்கலாம் என்றாா் அவா்.