சென்னை: சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை இல்லாமல் பொறுப்பாளர்களின் கூட்டம் நடைபெற்று வருகின்றது.
பாஜகவின் மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெறுவதாக இருந்தது.
மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில், இக்கட்சியின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ், மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி பங்கேற்கவுள்ளதாக இருந்தது.
இதற்கிடையே, அதிமுக - பாஜக கூட்டணி முறிந்ததை தொடர்ந்து முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமை அண்ணாமலை தில்லி சென்றார். அங்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த அண்ணாமலை மீண்டும் சென்னை திரும்பாமல் அங்கேயே தங்கினார்.
இதனைத் தொடர்ந்து, மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் தலைமையில் பாஜக பொறுப்பாளர்களின் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியுள்ளது.
இதையும் படிக்க | ஒரே ஒரு இ-சிகரெட் வைத்திருப்பதும் குற்றமே: மத்திய அரசு
இந்த கூட்டத்திற்கு வந்த பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, அதிமுகவுடன் கூட்டணி நீடிக்கும் என்றும், பேச்சுவார்த்தை நடப்பதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மாநில தலைவர் அண்ணாமலை இல்லாமல் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களின் கூட்டம் நடைபெறுவதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.