தமிழ்நாடு

அவிநாசி அருகே மதுபான கடையை மூடக்கோரி 3 ஊராட்சி மக்கள் போராட்டம்

3rd Oct 2023 11:58 AM

ADVERTISEMENT

 

அவிநாசி: அவிநாசி அருகே எதிர்ப்பை மீறி திறக்கப்பட்ட மதுபான கடையை உடனடியாக மூடக்கோரி  3 ஊராட்சி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவிநாசி அருகே சேவூர் பந்தம்பாளையதில் மக்கள் எதிர்ப்பையும் மீறி திறக்கப்பட்ட அரசு மதுபானக் கடை, மனமகிழ் மன்றத்தை உடனடியாக மூடக்கோரி வேட்டுவபாளையம், சேவூர், முறியாண்டம்பாளையம்  ஆகிய 3 ஊராட்சி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கூறியதாவது, திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம் சேவூர் பந்தம்பாளையத்தில் அரசு மதுபானக் கடை, மனமகிழ் மன்றம் அமைப்பதற்கான நடவடிக்கை கடந்த 6 மாதத்துக்கு முன் மேற்கொள்ளப்பட்டது. இதையறிந்த பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ந்து, முதல்வர் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்டவற்றிக்கு மனு கொடுத்தோம். மேலும் வேட்டுவபாளையம், சேவூர், முறியாண்டம்பாளையம் ஆகிய ஊராட்சி கிராம சபை கூட்டத்திலும் இந்த மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். 

ADVERTISEMENT

இதையும் படிக்க.. பிப்ரவரியில் படுக்கை வசதிகொண்ட வந்தே பாரத் ரயில்சேவை?

இருப்பினும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எதிர்ப்பையும் மீறி கடந்த மாதம் 17ம் தேதி  மதுபானக் கடை திறக்கப்பட்டது. இதை அறிந்து பொதுமக்கள் திறக்கப்பட்ட கடையை உடனடியாக  அப்புறப்படுத்த வேண்டும் என்று செப்டம்பர் 19ஆம் தேதியன்று, மூன்று ஊராட்சி பொதுமக்கள் கடை முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டோம். 

அப்போது பேச்சுவார்த்தைக்கு வந்த வட்டாட்சியர் மோகனன், அவிநாசி காவல் ஆய்வாளர் ராஜவேல் ஆகியோர் உறுதியாக ஒரு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதை நம்பி அனைவரும் கலைந்து சென்றோம். 

15 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதற்கு மாறாக கடை திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. சேவூர்- மேட்டுப்பாளையம் இணைப்பு சாலையில் திறக்கப்பட்டுள்ள இந்த மதுபான கடையால்,  பொதுமக்கள்,  பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள், குடியிருப்பு வாசிகள் என அனைத்து தரப்பினரும் பெரும் பாதிப்பு உள்ளாகி வருகிறோம். ஆகவே உடனடியாக இக்கடையை மூடி அப்புறப்படுத்த வேண்டும். கடையை மூடி அப்புறப்படுத்தும் வரை போராட்டத்தை தொடருவோம் என்றனர். 

போராட்டத்தை முன்கூட்டியே அறிந்த காவல்துறையினர், 100க்கும் மேற்பட்ட போலீஸாருடன், போராட்டத்தில் ஈடுபட முயன்ற மூன்று ஊராட்சி பொதுமக்களை தடுத்தனர். இருப்பினும், கடையை மூடும் வரை போராட்டத்தை தொடருவோம் எனக்கூறி கடை முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவிநாசி அருகே சேவூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT