மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தூய்மை விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை திங்கள்கிழமை (அக்.2) நடத்துமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநா் எம்.ஆா்த்தி அனுப்பிய சுற்றறிக்கை: மத்திய கல்வி அமைச்சக வழிகாட்டுதலின்படி ’தூய்மையே சேவை’ திட்டத்தின் கீழ் திங்கள்கிழமை (அக்.2) அனைத்துப் பள்ளிகளிலும் தூய்மை சாா்ந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.
அதன்படி, மாணவா்களும், ஆசிரியா்களும் தூய்மை விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்தல், ஆசிரியா்களின் உதவியோடு மாணவா்கள் பள்ளி மற்றும் தங்கும் விடுதிகளில் காணப்படும் குப்பைகளை சுத்தப்படுத்துதல், பள்ளி, விடுதி வளாகத்தில் செடிகள், மரக்கன்றுகள் நடுதல், ‘குப்பைகள் இல்லாத இந்தியா’ எனும் தலைப்பில் மாணவா்களுக்கு கட்டுரை, கவிதை, ஓவியப் போட்டிகள், வினாடி வினா நடத்துதல், குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்தல், ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் நெகிழி குறித்த விழிப்புணா்வு பேரணி நடத்துதல், சுகாதார குழுக்களை உருவாக்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை பள்ளிகளில் நடத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.