தமிழ்நாடு

தேசிய மருத்துவ ஆணைய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை திரும்பப் பெற முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி

1st Oct 2023 07:50 PM

ADVERTISEMENT


சென்னை: மத்திய அரசின் தேசிய மருத்துவ ஆணைய புதிய வழிகாட்டும் நெறிமுறைகளை உடனடியாக திரும்பப் பெறுவதற்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளாா் 

இது தொடர்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு கூட்டாட்சி தத்துவத்தை குழி தோண்டி புதைக்கிற வகையில் ஒரே நாடு ஒரே கலாச்சாரம், ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே நீட் தேர்வு, என அரசமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மாநில உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய நடவடிக்கைகளை தொடர்ந்து, தேசிய மருத்துவ ஆணையம் மாநிலங்களில் மருத்துவ படிப்பிற்கான இடங்களின் எண்ணிக்கையை மக்கள் தொகைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த முடிவு மருத்துவத்துறையில் முன்னேறிய மாநிலங்களாக இருக்கிற தென்னகத்தை சேர்ந்த தமிழ்நாடு, கர்நாடக, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிற மருத்துவத்துறைக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிற செயலாகும். 

இதையும் படிக்க | தமிழகத்தில் செப்டம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.10,481 கோடி!

இதன் மூலம் தென்னக மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் மோதல்போக்கு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த மாநிலங்களில் தேசிய மருத்துவ ஆணையம் குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ள மருத்துவப்படிப்பிற்கான இடங்களின் எண்ணைக்கையை விட அதிகமாக தற்போது இருந்து வருகிறது. இந்த முடிவு 2024-25 கல்வி ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டிருக்கிறது. 10 லட்சம் மக்கள் தொகைக்கு 100 மருத்துவ இடங்கள் என்று கொள்கை முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

2021 நிலவரப்படி, தமிழ்நாட்டின் மக்கள் தொகையான 7.64 கோடிக்கு 11600 இடங்கள் தற்போது நடைமுறையில் உள்ளன. ஆனால் புதிய ஒன்றிய அரசின் முடிவின்படி தமிழ்நாட்டினுடைய மொத்த இடங்கள் 7600 ஆக ஏறத்தாழ 4000 இடங்கள் குறைக்கப்பட உள்ளது. இது தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பையே சீர்குலைத்து விடுகிற நிலை ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் குறிப்பாக சென்னை, கோவை போன்ற மாநகரங்களில் நவீன மருத்துவ வசதி அதிகமாக இருப்பதால் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து இங்கு வந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்த அடிப்படையில் பார்க்கிறபோது மக்கள் தொகை அடிப்படையில் மாநிலத்தில் மருத்துவ இடங்களை நிர்ணயிப்பது மக்களின் மருத்துவ தேவை கடுமையாக பாதிக்கப்படும்.

அரசமைப்புச்சட்டத்தில் கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருந்தாலும் மத்திய அரசு புதிய கல்விக்கொள்கை, நீட் தேர்வு ஆகியவற்றை தமிழகத்தின் மீது திணிப்பதன் மூலம் மத்திய மோடி அரசு அரசமைப்புச்சட்டத்தை மீறுவதோடு, தமிழ்நாட்டில் உரிமைகளை தொடர்ந்து பறித்து வருகிறது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். 

மத்திய அரசின் தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய வழிகாட்டும் நெறிமுறைகளை உடனடியாக திரும்பப்பெறுவதற்கு மாநில உரிமைகளுக்காக குரல்கொடுத்து போராடி வருகிற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT