சென்னை: மாநகரப் போக்குவரத்துக் கழகம் தனது பேருந்துகளுக்கு எந்தக் காப்பீட்டுக் கொள்கையையும் எடுக்கவில்லை. 1971 டிசம்பர் 31ம் தேதியன்று வெளியிடப்பட்ட அரசாணையின்படி காப்பீட்டு நிதியில் போதுமான தொகையை பராமரிக்கவில்லை என்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய சுயாதீன தணிக்கை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
மோட்டார் வாகனச் சட்டம், 1988 பிரிவு 146, காப்பீட்டுக் கொள்கையிலிருந்து அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு விலக்கு அளித்தாலும், சட்டத்தின் கீழ் வரும் விதிகளின்படி நிதி நிறுவப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும் என்று வரையறுக்கிறது.
முன்னதாக ஜனவரி 20, 2018 முதல் பேருந்து கட்டணம் மாற்றியமைக்கப்பட்டதாகவும், டிக்கெட் ஒன்றுக்கு ரூ.1 செஸ் வசூலிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 31, 2023 நிலவரப்படி, ரூ.326 கோடியானது செஸ் வசூல், விபத்து இழப்பீடுகள், சுங்கக் கட்டணம் மற்றும் சட்டக் கட்டணம் ஆகியவற்றிற்கான செலவுகளை பூர்த்தி செய்ய ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.126.39 கோடி முந்தைய கோரிக்கைகளுக்கு தீர்வு காணவும், ரூ.63.64 கோடி வங்கிகளில் டெபாசிட் செய்யவும், மீதமுள்ள தொகை செயல்பாட்டு மூலதன தேவைகளுக்கும் செலவிடப்பட்டது.
மார்ச் 31, 2023 நிலவரப்படி மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.14,229.73 கோடி இழப்பு ஏற்பட்டது. அதே வேளையில் எம்.டி.சி.யின் மொத்த கடன் ரூ.12,771 கோடி ஆகும். இந்நிலையில் அதன் சொத்து மதிப்பு ரூ.696 கோடியாகும்.
ஏப்ரல் 1, 2004 முதல் ஊழியர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வருகிறது. இதில் ஊழியரின் பங்களிப்பு சம்பளத்திலிருந்து 10 சதவிகிதமும், நிறுவனம் 10 சதவிகிதம் தொகையை வழங்கும். இந்த தொகையானது மார்ச் 31, 2023 அன்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மாற்றப்பட வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் நிலுவைத் தொகை ரூ.743 கோடியாக உள்ள நிலையில் 2021-22ஆம் ஆண்டில் ரூ.634.42 கோடியாக இருந்தது. ஆனால் இந்த பணம் இது வரையிலும் செலுத்தப்படாமல் உள்ளது என தெரியவந்துள்ளது.