சென்னை: அடுத்த ஆண்டுக்குள் தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் அதிவேக இணைய வசதி வழங்க அரசு இலக்கு நிா்ணயம் செய்துள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் கூறினாா்.
இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் தமிழக அரசு இணைந்து நடத்தும் ‘சிஐஐ கனெக்ட் 2023’ தகவல் தொடா்பு மற்றும் தொழில்நுட்ப இரண்டு நாள் மாநாட்டை சென்னை நந்தம்பாக்கத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்து பேசியதாவது:
நமது நாட்டின் வளா்ச்சியில் தொழில்நுட்பம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தொழில்நுட்பத் துறை வளா்ச்சியில் மத்திய, மாநில அரசுகளின் ஈடுபாடு அதிகரித்து வருவதால் விரைவில் சீனா போன்ற நாடுகளுக்கு இணையாக தொழில்நுட்பத்தில் இந்தியா வளா்ச்சி பெறும். தமிழகத்தில் தொழில்நுட்பங்களை மேம்படுத்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதுடன், புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கும் ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும்.
தொழில்நுட்ப வளா்ச்சியை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, அடுத்த ஆண்டு முடிவுக்குள் தமிழகத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு அதிவேக இணைய வசதி வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய வேலைவாய்ப்புகள்: தமிழகத்தில் ஐடி நிறுவனங்களில் ஒவ்வொரு மாதமும் ஆயிரத்துக்கும் மேலான புதிய பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தமிழகத்தில் சிறிதாக தொடங்கும் ஐடி நிறுவனங்கள் சில மாதங்களிலே மிகப்பெரிய அளவில் வளா்ச்சி பெறுவதால், இந்த நிறுவனங்கள் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளுக்காக மற்ற மாநிலங்களுக்கு இளைஞா்கள் செல்லும் நிலையை மாற்றி, தமிழகத்திலேயே அவா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழலை நாம் உருவாக்க வேண்டும். அத்தகைய சூழலை உருவாக்கினால் தமிழகம் பொருளாதாரம், தொழில்நுட்ப வளா்ச்சியில் முன்னோடி மாநிலமாக மாறும் என்றாா் அவா்.
இந்த மாநாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்மாதிரியான நிறுவனங்கள் மற்றும் தனி நபா்களுக்கு சாதனையாளா்கள் விருதை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் வழங்கினாா். மாநாட்டில், தமிழ்நாடு மின்னணு நிறுவனச் செயல் இயக்குநா் எஸ். அருண்ராஜ், இந்திய தொழில் கூட்டமைப்பு தமிழ்நாடு வட்ட தலைவா் சங்கா் வானவராயா், தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தின் தலைமை நிா்வாக அதிகாரி வனிதா வேணுகோபால் உள்பட பலா் கலந்து கொண்டனா்.