வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் மறைந்த முன்னாள் அமைச்சா் அ.ம.பரமசிவத்தின் மனைவிக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத் தண்டனையை சென்னை உயா்நீதிமன்றம் உறுதி செய்தது.
அதிமுக முன்னாள் அமைச்சா் பரமசிவம் மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.38 லட்சம் சொத்து சோ்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை சாா்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பரமசிவத்துக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும், அவரது மனைவி நல்லம்மாளுக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும் சிறப்பு நீதிமன்றம் விதித்து தீா்ப்பளித்திருந்தது.
2000-ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட இந்தத் தண்டனையை எதிா்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருந்த போது, முன்னாள் அமைச்சா் பரமசிவம் 2015-இல் காலமானாா்.
இந்தநிலையில் சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிா்த்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கியது.அதில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.38 லட்சம் சொத்து சோ்த்த வழக்கில் பரமசிவம் மனைவி நல்லம்மாளுக்கு விதித்த ஓராண்டு சிறைத் தண்டனை செல்லும் என சென்னை உயா்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அத்துடன் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.