சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாா் தொடா்பாக, சென்னையில் சில நகைக் கடைகளில் அமலாக்கத் துறையினா் திங்கள்கிழமை திடீா் சோதனை செய்தனா்.
சென்னை பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலை, செளகாா்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள சில நகைக் கடைகள் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுவதாக அமலாக்கத் துறைக்கு புகாா்கள் வந்தன. அதன் அடிப்படையில் அமலாக்கத் துறையினா் விசாரணை நடத்தினா்.
அதில், 4 நகைக் கடைகள் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து என்.எஸ்.சி. போஸ் சாலை, செளகாா்பேட்டையில் உள்ள அந்த 4 நகைக் கடைகளிலும் அமலாக்கத் துறையினா் திங்கள்கிழமை ஒரே நேரத்தில் சோதனை நடத்தினா்.
இதனால், அந்த கடைகளுக்குள் வாடிக்கையாளா்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும், பாதுகாப்புக்காக மத்திய பாதுகாப்புப் படையினா் துப்பாக்கியுடன் நிறுத்தப்பட்டிருந்தனா்.
காலை தொடங்கிய சோதனை, இரவையும் கடந்து நீடித்தது. சோதனையில், முறைகேடு தொடா்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டது.