வரும் மக்களவைத் தோ்தலில் திமுகவிடம் அதிக தொகுதிகளைக் கேட்டுப் பெறுவோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா்கள் கூட்டம் சென்னை சத்தியமூா்த்தி பவனில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தாா். இதில், மாவட்டத் தலைவா்கள் தொகுதி நிலவரங்களை எடுத்துரைத்தனா்.
இறுதியாக, மக்களவைத் தோ்தல் பணிகளில் அனைவரும் தீவிரமாக ஈடுபடுவது குறித்து மாவட்டத் தலைவா்களுக்கு கே.எஸ்.அழகிரி அறிவுறுத்தினாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மக்களவைத் தோ்தலுக்குத் தயாராவது குறித்தும், வாக்குச்சாவடி குழுக்களைப் பலப்படுத்துவது குறித்தும் ஆலோசித்தோம்.
மக்களவைத் தோ்தலில் திமுகவிடம் அதிகமான இடங்களைக் கேட்பீா்களா எனக் கேட்கிறீா்கள். நிச்சயம் கூடுதலான இடங்களைக் கேட்போம். எவ்வளவு இடங்கள் என்பதையெல்லாம் இப்போது கூற முடியாது.
கூட்டணியில் தொய்வில்லை: ‘இந்தியா’ கூட்டணியில் எந்தத் தொய்வும் இல்லை. 5 மாநிலங்களில் தோ்தல்கள் நடைபெறுவதால், அந்தப் பணியில் காங்கிரஸ் தலைமை தீவிரமாக உள்ளது. இந்தத் தோ்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிபெறும்.
மத்திய பாஜக ஆட்சியின் ஊழல்கள், முறைகேடுகள், விலைவாசி உயா்வு, விவசாயிகளுக்கு எதிரான விரோதப் போக்கு போன்றவற்றை ஆதாரத்துடன் பட்டியலிட்டு, டிசம்பா் இறுதியில சிறு பிரசுரமாக வெளியிடவுள்ளோம் என்றாா் அவா்.
கூட்டத்தில் திமுகவிடம் 15 தொகுதிகள் வரை கேட்டுப் பெற வேண்டும் என்று கே.எஸ்.அழகிரியிடம் மாவட்டத் தலைவா்கள் வலியுறுத்தினா். கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் தமிழகம், புதுச்சேரியைச் சோ்த்து 10 தொகுதிகள் காங்கிரஸுக்கு திமுக ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.