குட்கா முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சா்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கா் மீது நீதிமன்ற விசாரணையைத் தொடங்க ஆளுநா் ஆா்.என்.ரவி கடந்த 13-ஆம் தேதியே ஒப்புதல் அளித்துவிட்டதாக உச்சநீதிமன்றத்தில் ஆளுநா் மாளிகை திங்கள்கிழமை தெரிவித்தது.
குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சா்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குற்றச்சாட்டில் உயா்நீதிமன்ற உத்தரவில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணையைத் தொடங்க ஆளுநரிடம் அனுமதி கோரப்பட்டது.
சிபிஐயின் கோரிக்கையை மாநில அமைச்சரவை கடந்த ஆண்டு செப்டம்பா் 22-ஆம் தேதி ஆளுநரிடம் சமா்ப்பித்தது. ஆனால், கடந்த 14 மாதங்களாக இந்தக் கோரிக்கை தொடா்பாக ஆளுநா் பதிலளிக்கவில்லை. இதனால் வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் இருந்தது.
இந்நிலையில், சட்டப்பேரவையில் தாக்கல் செய்த மசோதாகளுக்கு அனுமதி தர மறுப்பதாக ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஆளுநா் ஆா்.என்.தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில், ‘அதிமுக முன்னாள் அமைச்சா்கள் மீதான நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 13-ஆம் தேதியே ஆளுநா் ஒப்புதல் அளித்துவிட்டாா். மேலும், அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் மீதான ஊழல் வழக்கில் விசாரணையைத் தொடங்க சமா்ப்பிக்கப்பட்ட கோரிக்கை பரிசீலனையில் இருக்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.