தமிழ்நாடு

சென்னை: ரயிலில் பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட காவலர் கைது

18th Nov 2023 12:18 PM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னையில் மின்சார ரயிலில் பெண் ஒருவரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட தாம்பரம் காவல் நிலைய சட்டம்-ஒழுங்கு காவலர் கருணாகரன் கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கபிலா. இவர் பெருங்களத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். 

இந்த நிலையில்,  கடந்த 14-ஆம் தேதி கிண்டி ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெட்டியில் பயணம் செய்த ஆண் ஒருவர் திடீரென தனது அந்தரங்க உறுப்பை காண்பித்து ஆபாசமாக நடந்துகொண்டுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த பெண் அதிர்ச்சி அடைந்து தனது செல்போனில் அவரது  செயலை விடியோ எடுத்து வைத்துக்கொண்டு பின்னர் அவரிடம் சண்டையிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | உலகக் கோப்பை இறுதிப் போட்டியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்!

ஒருக்கட்டத்தில் அந்த நபருக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், நான் போலீஸ் எனக்கூறி மிரட்டல் விடுத்தவர் உன்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்துக்கொள் என்று அந்த பெண்ணிடம் சவால் விடுத்துள்ளார். பின்னர் சண்டையிட்டு கொண்டிருக்கும் போதே அந்த நபர் இடையிலேயே ரயிலில் இருந்து தப்பி குதித்து சென்றுள்ளார்.

இந்த நிலையில், மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண் தாம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கியதும் ரயில்வே காவலர்களிடம் தனக்கு நடந்த கொடுமைகளை கூறி புகார் அளித்ததோடு அந்த விடியோக்களையும் சமர்ப்பித்துள்ளார். 

இந்த புகாரில் விசாரணை நடத்திய ரயில்வே போலீசார் சிசிடிவி ஆதாரங்கள் மற்றும் விடியோக்களை சரி பார்த்ததில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் தாம்பரம் காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு காவலராக பணிபுரிந்து வரும் கருணாகரன் என்பதை உறுதி செய்தனர். 

பின்னர், விடியோ ஆதாரங்கள் அடிப்படையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

வேலியே பயிரை மேய்ந்த கதையாக பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலரே இப்படி மிகவும் கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT