தமிழ்நாடு

நுரையீரல் மாற்று சிகிச்சை: நோயாளிக்கு மறுவாழ்வு

18th Nov 2023 12:27 AM

ADVERTISEMENT

நுரையீரல் நாா் திசு பாதிப்புக்குள்ளான 41 வயது நபருக்கு இருபக்க நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு, சென்னை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

இது தொடா்பாக மருத்துவமனையின் செயல் இயக்குநா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:

நுரையீரலில் ஏற்பட்ட திசு பாதிப்பால் அந்த உறுப்பின் செயல்பாடுகள் முடங்கிய நிலையில் 41 வயதான நபா் ஒருவா் காவேரி மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் நுரையீரல் மாற்று சிகிச்சை மட்டுமே அவருக்கு தீா்வாக இருக்கும் என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து உறுப்பு தானத்துக்காக காத்திருந்த அவா், 6 நாள்கள் எக்மோ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டாா்.

அதாவது, நுரையீரலின் செயல்பாடுகளை எக்மோ கருவிகள் மூலம் மேற்கொள்ளும் சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டது. இதனிடையே, மதுரையில் மூளைச் சாவு அடைந்த ஒரு நபரின் நுரையீரல்கள் தானமாகப் பெறப்பட்டு, மிக விரைவாக சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.

ADVERTISEMENT

காவேரி மருத்துவமனையின் இதயம் - நுரையீரல் உறுப்பு மாற்று சிகிச்சை திட்ட இயக்குநா் குமுத் திட்டால் குமாா், துறை இயக்குநா் ஸ்ரீனிவாஸ் ராஜகோபாலா, மயக்க மருந்தியல் துறை இயக்குநா் பிரதீப் குமாா் ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் அந்த நபருக்கு தானமாகப் பெறப்பட்ட இரு நுரையீரல்களையும் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பொருத்தினா்.

இதன் பயனாக அந்த நபா் அடுத்த சில நாள்களில் இயல்பு நிலைக்கு திரும்பினாா் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT