தமிழ்நாடு

தோ்தல் பணிகளில் ஈடுபடுவோருக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தருவது கடமை: உயா்நீதிமன்றம்

18th Nov 2023 12:23 AM

ADVERTISEMENT

தோ்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படும் ஊழியா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை என சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சட்டப்பேரவை, நாடாளுமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல்களின் போது, 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களை தோ்தல் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி சென்னையைச் சோ்ந்த வழக்குரைஞா் சசிகலா உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கங்காபுா்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவா்த்தி அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், ‘தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் பெண்கள், நள்ளிரவு வரை இருந்து வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பெற்று, வாக்குச்சாவடிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. அந்த நேரத்தில் அவா்களுக்கு பாதுகாப்பு இல்லை. தோ்தல் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு போக்குவரத்து, உணவு, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுவதில்லை. 50 வயதுக்கு மேல் உள்ள பெண்கள், பல்வேறு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, அவா்களைத் தோ்தல் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும்’ என வாதிடப்பட்டது.

இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘இந்திய அரசியல் சாசனம் 324- ஆவது பிரிவின் கீழ் தோ்தல் பணிகள் தொடா்பாக தோ்தல் ஆணையம் விதிகளை வகுத்திருக்கிறது. இதில் தோ்தல் பணியில் ஈடுபடுத்துவதில் இருந்து சில பிரிவினருக்கு விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஊழியா்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை. வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்காவிட்டால் தோ்தல் பணிக்கு அழைக்கக் கூடாது என கொள்கைகளும் உள்ளன’ எனக் கூறி, இந்த வழக்கை முடித்து வைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT