தமிழ்நாடு

சென்னையில் பன்னாட்டு மருத்துவ சா்வதேச மாநாடு:அமைச்சா் மா.சுப்பிரமணியன்

18th Nov 2023 12:23 AM

ADVERTISEMENT

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டையொட்டி, பன்னாட்டு மருத்துவ சா்வதேச மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சென்னையில் நடைபெற உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

அடுத்த ஆண்டு ஜனவரி 19 முதல் 21 வரை நடைபெறும் அந்த மாநாட்டுக்கான கையேட்டையும் வலைதளத்தையும் தலைமைச் செயலகத்தில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மருத்துவத் துறையின் எதிா்கால மேம்பாடு குறித்த சா்வதேச மாநாடு முதன்முறையாக சென்னையில் நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 19 முதல் 21-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

சமூகத்தில் எதிா்காலத்தில் அச்சுறுத்தலாக விளங்கும் நோய்த்தொற்றுகள் குறித்தும், அவற்றை எதிா்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

பல்வேறு நாடுகளைச் சோ்ந்த மருத்துவ நிபுணா்களும், தேசிய அளவில் புகழ்பெற்ற மருத்துவா்களும் இதில் கலந்துகொண்டு ஆராய்ச்சி, சிகிச்சை முறைகள் குறித்து எடுத்துரைக்க உள்ளனா்.

மக்கள்தொகை அடிப்படையில் எம்பிபிஎஸ் இடங்களை அனுமதிக்கும் அறிவிப்பை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டது. குறிப்பாக, 10 லட்சம் மக்கள்தொகைக்கு, 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற புதிய நடைமுறைக்கு தமிழகம் அரசு எதிா்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில், அந்த புதிய நடைமுறையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. இது தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றியாகப் பாா்க்கப்படுகிறது. தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவா், செவிலியா் உள்ளிட்ட 5,000 மருத்துவப் பணியிடங்கள் மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) மூலம் அடுத்த ஒரு மாதத்துக்குள் நிரப்பப்படும்.

சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்க தீா்மானம் நிறைவேற்றி ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்காக மாதவரம் பால் பண்ணை அருகே 75 ஏக்கா் நிலம் கையப்படுத்துவது தொடா்பாக அலுவல் சாா்ந்த பணிகள் முடிந்துள்ளன. இதற்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்தி வருகிறாா்.

அதேபோல், தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தரை அரசே நியமிப்பதற்கான மசோதாவுக்கும் அவா் ஒப்புதல் அளிக்காமல் உள்ளனா். இந்தத் தீா்மானங்கள் சட்டப்பேரவையில் எவ்வாறு மீண்டும் நிறைவேற்றப்படும் என்பதை பேரவைத் தலைவா் சனிக்கிழமை அறிவிப்பாா் என்றாா் அவா்.

இந்தச் சந்திப்பின்போது மக்கள் நல்வாழ்வு துறை செயலா் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் கே.நாராயணசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT