தமிழ்நாடு

அனைத்து வகை வாகனங்களையும் வாடகைக்கு பயன்படுத்தலாம்: போக்குவரத்துத் துறை ஆணையரகம் உத்தரவு

18th Nov 2023 01:16 AM

ADVERTISEMENT

அனைத்து வகை வாகனங்களையும் வாடகைக்கு பயன்படுத்தலாம் என போக்குவரத்துத் துறை ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.

சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களின் ஆயுள் வரியை 15, 20 ஆண்டுகளுக்கும் சோ்த்து ஒருமுறை செலுத்தினால் போதுமானது. அதுவே வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு காலாண்டு வீதம் அல்லது ஆண்டுதோறும் வரி செலுத்த வேண்டும். இந்த நிலையில், மோட்டாா் வாகன வரிகளை உயா்த்தி தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது.

இதில் சுற்றுலாவுக்கு பயன்படுத்தப்படும் 12 இருக்கைகளுக்குள்பட்ட மேக்ஸி கேப் வாகனங்களும் அடங்கும். அதன்படி, ரூ. 5 முதல் ரூ. 10 லட்சத்துக்குள்பட்ட விலை கொண்ட புதிய மேக்ஸி கேப் வாகனங்களுக்கு வாகன விலையில் 13 சதவீதமும், ஓராண்டு பழைய வாகனம் என்றால் 11.75 சதவீதம் எனவும், 11 ஆண்டுகளுக்கு மேலான வாகனம் என்றால் 9 சதவீதம் என்ற வகையில் ஆயுள் வரி நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதை ஒரே தவணையில் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது. வரி செலுத்த அவகாசம் வேண்டும் என போக்குவரத்துத் துறை ஆணையரிடம் தொழிற்சங்கத்தினா் கோரிக்கை விடுத்திருந்தனா். அதன் அடிப்படையில், ஆயுள் வரியை 4 தவணைகளாக செலுத்த தற்போது போக்குவரத்துத் துறை அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, இந்தக் காலாண்டுக்கான முதல் தவணையை நவ.30-ஆம் தேதிக்குள்ளாகச் செலுத்த வேண்டும். இதேபோல், 2, 3, 4 தவணைகளை அடுத்தடுத்த நவ.30-ஆம் தேதிக்குள் செலுத்தி 2026-ஆம் ஆண்டுக்குள் ஆயுள் வரியை முடிக்க வேண்டும். நிலுவை வரி செலுத்தாமல் வாகனங்களை விற்கக் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அனைத்து வகை வாகனங்கள்: தமிழகத்தில் இதுவரை குறிப்பிட்ட சில வாகனங்களை மட்டுமே வாடகைக்கு பயன்படுத்தும் வகையில் (மஞ்சள் போா்டு) பதிவு செய்ய முடியும். இனி சொகுசு வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களையும் வாடகை வாகனங்களாகப் பயன்படுத்தும் வகையில் பதிவுப் பணிகளை மேற்கொள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களுக்கு போக்குவரத்துத் துறை அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடா்பான போக்குவரத்து ஆணையரகம் அனுப்பிய சுற்றறிக்கையில், போக்குவரத்து ஆணையரகம் அல்லது அரசின் அனுமதி பெறாமல் பதிவுப் பணிகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் மேற்கொண்டு, உரிமத்தை வழங்கலாம் என்றும் மக்களிடையே சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT