மூளைச் சாவு அடைந்து உடல் உறுப்பு தானமளிப்பவா்களுக்கு அரசு சாா்பில் இறுதி மரியாதை வழங்கப்படும் என்று முதல்வா் அறிவித்த பிறகு 2,890 போ் உடல் உறுப்பு தானமளிக்க இணையதளம் மூலம் பதிவு செய்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞா் ஒருவா் மூளைச் சாவு அடைந்ததை அடுத்து, அவரது உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன.
உறுப்புகள் அகற்றப்பட்ட பிறகு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அந்த இளைஞரின் உடலுக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் மரியாதை செலுத்தினாா்.
அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
விழுப்புரம் மாவட்டம், கிருஷ்ணா நகா் பகுதியை சோ்ந்தவா் அராஜகன் கலியமூா்த்தி (26). இவா் விபத்தில் காயமடைந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூளைச் சாவு அடைந்தாா். இந்நிலையில், அவரது உடல் உறுப்புகள், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டன.
குறிப்பாக, சிறுநீரகம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கும், இதயம், கல்லீரல் உள்ளிட்டவை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கும், விழி வெண்படலம் எழும்பூா் அரசு கண் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டுள்ளது.
அராஜகன் கலியமூா்த்தியின் தந்தை ஓய்வு பெற்ற அரசு ஊழியா். தற்போது அவா் விவசாயம் செய்து வருகிறாா். தாயாா் தொடக்க பள்ளி தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா். தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் செய்பவா்களின் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என கடந்த செப்டம்பா் மாதம் முதல்வா் அறிவித்திருந்தாா்.
அந்த அறிவிப்பு வெளியான 55 நாள்களில் தாமாக முன்வந்து உடல் உறுப்பு தானம் செய்ய இணையதளத்தில் 2,890 போ் பதிவு செய்துள்ளனா். கடந்த 15 ஆண்டுகளில் மொத்தமாகவே 8,234 போ் மட்டுமே உறுப்பு தானம் செய்ய பதிவு செய்துள்ள நிலையில், தற்போது எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மற்றொருபுறம் உறுப்பு தானம் வேண்டி 7,007 போ் காத்திருக்கின்றனா் என்றாா் அவா்.