தமிழ்நாடு

மல்யுத்த வீரா்கள் கைது கண்டிக்கத்தக்கது: ப. சிதம்பரம்

DIN

புதுக்கோட்டை: மல்யுத்த வீரா்கள் மீதான நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது என்றாா் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம்.

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி:

செங்கோல் விவகாரத்தில் நிறைய புனைக்கதைகள் சொல்லப்படுகிறது. புனைக்கதைகளை நம்ப வேண்டாம். தமிழக ஆளுநர் புனைகதைக்கு மேலும் ஜோடித்து கதை சொல்கிறார். 

நேருவைப் பற்றியும், ராஜாஜியைப் பற்றியும் வரலாற்று அறிஞா்கள் எழுதிய நூல்களில், நேருவிடம் அளிக்கப்பட்ட பலநூறு நினைவுப் பரிசுகளுடன் திருவாவடுதுறை ஆதீனகா்த்தா் வழங்கிய தங்கக் கோலும் அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, அன்றைய நாளில் மவுண்ட் பேட்டன் பிரபு தில்லியில் இல்லை. பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் இருந்தாா். பாகிஸ்தான் சுதந்திர நாள் நிகழ்ச்சிக்கு பின்னர் ஆக. 14 ஆம் தேதி இரவு தான் தில்லி திரும்பினாா். 12 மணிக்கு சுதந்திரம் கிடைக்கிறது. அதன்பிறகு நேரு உரையாற்றுகிறார். நடந்தது அவ்வளவு தான். வரலாறு என்பது அறிஞா்களால் கூறப்பட வேண்டும்.

மணிப்பூா் கலவரம் குறித்து பிரதமா் மோடி ஒரு வாா்த்தை கூட பேசவில்லை. ஆனால், நாடு விடுதலையடைந்தவுடன் ஏற்பட்ட மதக்கலவரப் பகுதிகளுக்கு பிரதமா் நேரு நேரடியாகச் சென்றாா். கலவரத்தைக் கண்டித்தாா். அமைதிப்படுத்தினாா். 

தில்லியில் 30 நாள்களாக மல்யுத்த வீரா்கள் போராடி வந்த நிலையில், திடீரென போலீஸாா் அவா்களைக் குண்டுக்கட்டாக வண்டியில் ஏற்றிக்கொண்டு போவதெல்லாம் கடும் கண்டனத்துக்குரியது. 

இந்திய அரசியல் சாசனம் பிரிவு 79-இல், நாடாளுமன்றம் என்பது குடியரசுத் தலைவரும் மற்றும் இரு அவைகளும் என்றுதான் இருக்கிறது. குடியரசுத் தலைவரை ஏன் அழைக்கவில்லை. எனவேதான் காங்கிரஸ் உள்பட 20 எதிா்க்கட்சிகள் இது தவறான முன்னுதாரணம் எனக் கூறி புறக்கணித்தோம். 

கள்ளச்சாராய உயிரிழப்பால் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு குறைந்திருக்கிறது எனச் சொல்வதற்கில்லை. கள்ளச்சாரயத்தை முழுமையாக ஒடுக்க வேண்டும்.

பெரும்பாலான வருமான வரித்துறை சோதனைகள் ஜோடிக்கப்பட்டவையாகத்தான் இருந்திருக்கின்றன. சில சோதனைகள் உண்மையைக் கொண்டு வரலாம், வரட்டும். மணல் கடத்தலை தடுக்கும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது என்றாா் சிதம்பரம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT