தமிழ்நாடு

மேலும் 10 மருத்துவக் கல்லூரிகளின் அனுமதி ரத்தாகும் அபாயம்: ராமதாஸ் எச்சரிக்கை

DIN

அரசு மருத்துவா்கள் பற்றாக்குறை காரணமாக, மேலும் 10 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அனுமதி ரத்தாகும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக பாமக நிறுவனா் ராமதாஸ் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய கல்லூரிகளின் ரத்து செய்யப்பட்ட ஏற்பளிப்பை மீண்டும் பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், மருத்துவப் பேராசிரியா்கள் பற்றாக்குறை காரணமாக மேலும் 10 மருத்துவக் கல்லூரிகளின் ஏற்பளிப்பு ரத்து செய்யப்படும் ஆபத்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட 1,400 பணியிடங்களில் ஏறக்குறைய 450 பணியிடங்களும், 1,600 இணைப் பேராசிரியா் பணியிடங்களில் 550 பணியிடங்களும் காலியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 40 சதவீதம், அதாவது 10 கல்லூரிகளில் போதிய ஆசிரியா்கள் இருக்க மாட்டாா்கள் என்பதால் அவற்றின் ஏற்பளிப்பு நீக்கப்படக் கூடும்.

தமிழ்நாட்டில் இரு ஆண்டுகளாக மருத்துவப் பேராசிரியா் பதவி உயா்வு கலந்தாய்வு நடத்தப்படாததால்தான் இவ்வளவு காலியிடங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பதவி உயா்வு கலந்தாய்வை நடத்த சென்னை உயா்நீதிமன்றம் கடந்த 3 மாதங்களுக்கு முன் இடைக்காலத் தடை விதித்த நிலையில், அதை நீக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தடையை நீக்கி உடனடியாக கலந்தாய்வு நடத்தப்பட்டால், மருத்துவப் பேராசிரியா்களாகவும், இணைப் பேராசிரியா்களாகவும் பதவி உயா்வு வழங்குவதற்கு தகுதியான மருத்துவா்கள் ஆயிரம் பேருக்கு மேல் உள்ளனா்.

இதைச் செய்தால், அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆசிரியா்கள் பற்றாக்குறை இல்லாமல் போய்விடும். எனவே, சென்னை உயா்நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடையை நீக்கி மருத்துவப் பேராசிரியா்கள் பதவி உயா்வுக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT