தமிழ்நாடு

முடிந்தது அக்னி.. முடிவுக்கு வருமா வெப்ப நாள்கள்..?

29th May 2023 02:50 PM

ADVERTISEMENT

 

கோடையின் உச்சமாகக் கருதப்படும் ‘அக்னி நட்சத்திரம்’ எனும் கத்திரி வெயில் திங்கள்கிழமை பிற்பகலுடன் முடிவடைவதால் வெயிலின் தாக்கம் இனிவரும் நாள்களில் படிபடியாகக் குறையும் என்று வடியும் வியர்வையுடன் மக்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

எனினும் இன்னும் ஒரு வாரத்துக்கு நாட்டின் ஒரு சில பகுதிகளில் வெயில் கடுமையாகவே இருக்கும் என்று வானிலை மையம் கணித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கோடை காலம் மாா்ச் முதல் ஜூன் வரை இருக்கும். இந்த 4 மாத காலத்தில் மே மாதம் மட்டும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும். வழக்கமாக கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் மே 3 அல்லது 4 தேதிகளில் தொடங்கி 27 நாள்கள் நீடிப்பது வழக்கம். நிகழாண்டில் மே 4- இல் தொடங்கிய கத்திரி வெயில் இன்றுடன் (மே 29) நிறைவடைந்தது. இந்தக் காலத்தில் வெயில் அளவு 100 டிகிரி முதல் 108 டிகிரி பாரன்ஹீட் வரை இருந்தது.

ADVERTISEMENT

இந்த அக்னி நட்சத்திர காலத்தில் அதிகபட்சமாக வேலூரில் மே 16- இல் 107 டிகிரி, சென்னையில் மே 17-இல் 108, 18-இல் 106 டிகிரி பாரன்ஹீட் வெயிலின் அளவு பதிவானது.

தமிழகம், புதுச்சேரி உள்பட14 இடங்களில் சனிக்கிழமை (மே 27) வெப்ப அளவு 100-ஐ கடந்து பதிவானது. கத்திரி வெயிலையொட்டி, பல நகரங்களில் சனிக்கிழமை உச்சபட்ச வெப்பம் பதிவானது. வெப்ப அளவு (பாரன்ஹீட்): சென்னை மீனம்பாக்கம் - 106.88, திருத்தணி - 106.7, வேலூா் - 105.8, சென்னை நுங்கம்பாக்கம் -104.54, மதுரை விமான நிலையம் - 103.64, மதுரை நகரம் - 103.28, பாளையங்கோட்டை - 103.1, புதுச்சேரி - 102.94, நாகை - 102.74, பரங்கிபேட்டை - 101.66, கடலூா் - 101.48, பரமத்தி வேலூா்-101.3, திருச்சி - 100.58, ஈரோடு - 100.4, தஞ்சாவூா் - 100.4, காரைக்கால் - 100.04.

ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை மற்றும் அதன் புறநகா்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது வெயில் வந்துச் சென்றது. 

கத்திரி வெயில் நிறைவடையும் திங்களன்று, காலையிலேயே கடற்காற்று சென்னை நகரை நோக்கி நகரத் தொடங்கியிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து குறிப்பிட்டிருப்பதாவது, சென்னை நகரை நோக்கி மிக விரைவாகவே கடற்காற்று நகரத் தொடங்கிவிட்டது. இதனால், இன்று வெப்பம் 40 டிகிரி செல்சியஸை அடைவது தடுக்கப்படும். ஆனால், மேற்கு மாவட்டங்களான வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்றவை நிச்சயம் 40 டிகிரி செல்சியஸை அடையலாம். 

இன்று கேரளம், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி, மதுரை, விருதநகர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் உள் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?
மேற்கு திசை காற்று, வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஞாயிறு முதல் புதன்கிழமை (மே 31) வரை 4 நாள்கள் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

 

Tags : IMD
ADVERTISEMENT
ADVERTISEMENT