தமிழ்நாடு

குழந்தை பலியான சம்பவம்: சாலை அமைக்காததற்கு வருத்தம் தெரிவித்த வேலூர் ஆட்சியர்!

29th May 2023 12:19 PM

ADVERTISEMENT

வேலூர்: அல்லேரி மலைக் கிராமத்துக்கு சாலை வசதி இல்லாத நிலையில், பாம்பு கடித்து உயிரிழந்த குழந்தையின் சடலத்தைக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் கிராமத்துக்கு தொடா்ந்து செல்ல வழியின்றி, சடலத்துடன் பெற்றோா் பாதியிலேயே இறக்கி விடப்பட்டனா். இதனால், வேறு வழியின்றி பெற்றோா், சுமாா் 10 கிலோ மீட்டா் தூரம் உறவினா்கள் குழந்தையின் உடலை கைகளிலேயே சுமந்தபடி தூக்கிச் சென்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சாலை அமைக்காததற்கு வேலூர் ஆட்சியர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், அல்லேரி மலைக் கிராமத்துக்குட்பட்ட அத்திமரத்துக் கொல்லை கிராமத்தைச் சோ்ந்தவா் கூலி தொழிலாளி விஜி. இவரின் மனைவி பிரியா. இவா்களின் ஒன்றரை வயது தனுஷ்கா என்ற பெண் குழந்தை வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தபோது, அருகே உள்ள காட்டுப் பகுதியில் இருந்து ஊா்ந்து வந்த விஷப் பாம்பு குழந்தையைக் கடித்தது.

குழந்தையின் அழுகை சப்தம் கேட்டு வெளியே வந்த பெற்றோா், குழந்தையை பாம்பு கடித்ததை கவனித்துள்ளனா். மலைக் கிராமத்தில் மருத்துவம் பாா்க்க வசதி இல்லாததால், சிகிச்சைக்காக அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், மலைக் கிராமத்துக்கு சாலை வசதி இல்லாத காரணத்தால், மருத்துவமனைக்குச் செல்ல நீண்ட நேரம் ஆனது.

அதற்குள் விஷம் உடல் முழுவதும் பரவி குழந்தை வழியிலேயே உயிரிழந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில், உடல்கூறு பரிசோதனை முடிந்து குழந்தையின் சடலம் வீட்டுக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், மலைக் கிராமத்துக்கு சாலை வசதி இல்லாமல் ஆம்புலன்ஸ் தொடா்ந்து செல்ல வழியின்றி, குழந்தையின் உடலை பாதி வழியிலேயே பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு, ஆம்புலன்ஸ் ஊழியா்கள் திரும்பிச் சென்றுள்ளனா்.

இதையடுத்து, குழந்தையின் சடலத்தை பெற்றோா் சிறிது தூரம் இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றனா். அதற்கு மேல் இரு சக்கர வாகனத்திலும் செல்ல சரியான பாதை இல்லாததால், குழந்தையின் சடலத்தை பெற்றோா், உறவினா்கள் சுமாா் 10 கி.மீ. தொலைவு கைகளில் தூக்கிச் சென்றுள்ளனா். இந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சாலை வசதி இல்லாததால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை இறந்ததுடன், சடலத்தை கிராமத்துக்கு வாகனத்தில் கொண்டு வரவும் முடியாமல் கைகளாலேயே பெற்றோா் தூக்கிச் சென்ற சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து அல்லேரி மலைக் கிராமத்துக்கு அரசு விரைவில் சாலை வசதி மட்டுமன்றி, மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றித் தர வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்த சம்பவம் தொடர்பாக திங்கள்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அல்லேரி மலைக்கிராமத்தில் பாம்பு கடித்ததில் ஒரு வயது குழந்தை இறந்த விவகாரத்தில் தமிழக அரசே முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், பிரதமரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் சிறிய, மலைக் கிராமங்களில் சாலைகள் அமைக்க மத்திய அரசு பெருமளவில் நிதி ஒதுக்கியுள்ள நிலையில் இத்தனை ஆண்டுகளாக வேலூர் போன்ற மாநகரத்தைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் கூட சாலைகள் அமைக்கப்படவில்லை என்றால், இத்தனை ஆண்டுகளாக ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் அல்லேரி மலைக்கிராமத்தில் திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டதுடன், பாம்பு கடியால் உயிரிழந்த குழந்தையின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: அல்லேரி மலைக்கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஒன்றரை வயது குழந்தையை பாம்பு கடித்துள்ளது. அதேசமயம், இந்த மலைக்கிராமத்தில் ஏற்கனவே சுகாதார செவிலியர் பணியமர்த்தப்பட்டு அவரது தொடர்பு எண்களும் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனினும், குழந்தையை பாம்பு கடித்துவிட்ட பதற்றத்தில் பெற்றோர் இந்த மலைக்கிராம சுகாதார செவிலியரை தொடர்பு கொள்ளாமல் நேரடியாக அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டுச் சென்றுள்ளனர். அப்போதுதான் குழந்தை உயிரிழந்துள்ளது.

சாலையை பொறுத்தவரை அனைத்து மலைக்கிராமங்களிலும் ஊரக வேலையுறுதித் திட்டத்தின்கீழ் சாலைகளை செம்மைப்படுத்தி போக்குவரத்துக்கு ஏற்ற வழித்தடமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், அல்லேரி மலைக்கிராமத்துக்கு சாலை அமைக்க ரூ.5 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. வனத்துறை அனுமதி கிடைத்தவுடன் தார் சாலை அமைக்கப்பட இருந்தது. அதற்குள் இந்த துயர நிகழ்வு ஏற்பட்டுள்ளது. இதுவரை சாலை அமைக்க முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்தார். 

இதுபோன்று அடுத்து ஒரு நிகழ்வு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வரும், தலைமைச்செயலரும் உத்தரவிட்டுள்ளனர். அதனடிப்படையில், விரைவில் அல்லேரி மலைக்கிராமத்துக்கு தார் சாலை அமைக்கப்படும். மேலும், இங்கு கிளை சுகாதார நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் கூறினார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT