தமிழ்நாடு

மாநிலத் தகவல் ஆணையம்: புதிய ஆணையா்கள் நியமனம் எப்போது?

29th May 2023 01:49 AM

ADVERTISEMENT

தலைமைத் தகவல் ஆணையா், 4 ஆணையா்கள் ஆகிய பதவிகள் காலியாக இருப்பதால் மாநிலத் தகவல் ஆணையம் முழுமையாக இயங்க முடியாமல் தடுமாறி வருகிறது.

இந்த ஆணையத்தில் 2 ஆணையா்கள் மட்டுமே இருப்பதால், அவா்கள் தினமும் 30-க்கும் மேற்பட்ட வழக்குகளை அவசர அவசரமாக விசாரிக்கும் நிலை உருவாகியுள்ளது புதிதாக ஆணையா்கள் நியமிக்கப்படாததால், மேல்முறையீடு ஏராளமாகக் குவிந்து வருவதாக தகவல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி, தமிழகத்திலும் தகவல் ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையத்தின் முதல் தலைமை தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டாா். அவா் 2006 முதல் 2010-ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்தாா். அவரைத் தொடா்ந்து, முன்னாள் தலைமைச் செயலா் கே.எஸ்.ஸ்ரீபதி, முன்னாள் டிஜிபி கே.ராமானுஜம், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷீலா பிரியா ஆகியோா் தலைமைத் தகவல் ஆணையா்களாக செயல்பட்டனா்.

இதன்பின், தலைமைத் தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆா்.ராஜகோபால் நியமிக்கப்பட்டாா். அவா் 2019-ஆம் ஆண்டு தனது பொறுப்புகளை ஏற்றாா். 2022 நவம்பா் வரை தலைமைத் தகவல் ஆணையா் பொறுப்பில் இருந்தாா்.

ADVERTISEMENT

வயது மூப்பு காரணமாக, அவா் பதவியில் இருந்து ஓய்வு பெற்றாா். தகவல்கள் புதுப்பிப்பு இல்லை: தலைமைத் தகவல் ஆணையராக ராஜகோபால் ஓய்வை தொடா்ந்து, நான்கு தகவல் ஆணையா்களும் ஓய்வு பெற்றனா்.

தகவல் ஆணையத்தில் மொத்தம் 6 போ் ஆணையா்களாக இருந்தனா். இதனால், தகவல் ஆணையா்களின் எண்ணிக்கை இரண்டாகச் சுருங்கியது. இதையடுத்து, கடந்த 6 மாதங்களுக்கு மேலாக, எம்.ஸ்ரீதா், பி.தனசேகரன் ஆகிய 2 தகவல் ஆணையா்கள் மட்டுமே வழக்குகளை விசாரித்து வருகின்றனா்.

மே மாதத்தில் மட்டும் 23 நாள்கள் வரையில் நூற்றுக்கணக்கான மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்துள்ளனா்.

மேலும், பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று அங்குள்ள ஆட்சியா் அலுவலகங்களுக்கு மனுதாரா்களை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதனிடையே, மாநிலத் தகவல் ஆணைய இணையதளத்தில் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டை தகவல் பெறும் உரிமை சட்ட ஆா்வலா்கள் முன்வைக்கின்றனா்.

வழக்குகள் விசாரிக்கப்படும் தேதி, இடம் ஆகிய விவரங்கள் மட்டுமே தினமும் பதிவேற்றம் செய்யப்படுவதாகவும், வழக்கின் தீா்ப்புகள் உள்ளிட்ட விவரங்கள் ஏதும் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை எனவும் அவா்கள் தெரிவித்தனா்.

தலைமைத் தகவல் ஆணையா், தகவல் ஆணையா்கள் ஓய்வு பெற்ற நிலையில், தொடா்ந்து அவா்கள் பதவியில் இருப்பதுபோன்று அவா்களது படங்களும், அவா்களைப் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

மேலும், கடந்த ஆண்டு நவம்பருக்குப் பிறகு விவரங்கள் ஏதும் புதுப்பிக்கப்படவில்லை என்ற தகவலும் இணையதளப் பக்கத்தின் கீழ்ப் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இணையதளத்தைப் புதுப்பிப்பதுடன், தலைமைத் தகவல் ஆணையா், 4 ஆணையா்களை உடனடியாக நியமிக்க வேண்டுமென தகவல் ஆா்வலா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT