தமிழ்நாடு

உலக பட்டினி நாள்: சேலத்தில் மக்களுக்கு உணவு வழங்கிய விஜய் மக்கள் மன்றத்தினர்

28th May 2023 04:59 PM

ADVERTISEMENT

சேலத்தில் உலக பட்டினி நாளையொட்டி ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு விஜய் மக்கள் மன்றத்தினர் உணவு வழங்கி பசியாற்றினர். 

இன்று உலக பட்டினி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி யாரும் பட்டினியாய் இருக்கக் கூடாது என்ற நோக்கோடு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை வகுத்து வறுமையை ஒழிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் உலக பட்டினி நாளன்று தமிழகம் முழுவதும் உள்ள ஏழை, எளியோருக்கு உணவு வழங்கிட வேண்டுமென நடிகர் விஜய் தங்கள் மன்றத்தினருக்கு உத்தரவிட்டார்.

இதன் அடிப்படையில் இன்று உலக பட்டினி நாளையொட்டி தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் மன்றத்தினர் ஏழை, எளியோருக்கு அன்னதானம் மற்றும் மதிய உணவை வழங்கி வருகின்றனர். இதன்படி சேலம் அம்மாபேட்டை பகுதியில் சேலம் மாவட்ட விஜய் மக்கள் மன்றத்தின் சார்பில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதற்காக பெரிய அளவிலான பந்தல் அமைக்கப்பட்டு நூற்றுக்கு மேற்பட்ட டேபுள்கள் போடப்பட்டன.

அங்கு வந்த அனைவருக்கும் அறுசுவையோடு உணவு பரிமாறப்பட்டது. 

ADVERTISEMENT

காலை 9 மணிக்கு துவங்கிய உணவு வழங்கும் நிகழ்ச்சி மதியம் 2 மணி வரை நீடித்தது. அம்மாபேட்டை, வாய்க்கா பட்டறை, கிச்சி பாளையம், நாராயண நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நேரடியாக வந்து விஜய் ரசிகர்கள் வழங்கிய உணவுகளை அருந்தினர். இது மட்டுமல்லாமல் சாலையோர ஆதரவற்றோர் தெருவோர சிறார்கள் மற்றும் ஆதரவற்ற இல்லங்களுக்கும் விஜய் மக்கள் மன்றத்தின் சார்பில் இன்று உணவு வழங்கப்பட்டது.

மாவட்ட தலைவர் பார்த்திபன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விஜய் மக்கள் மன்றத்தினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று ஏழை, எளியோருக்கு உணவு வழங்கி பசியாற்றினர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT